முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியது குறித்து பொதுக் கூட்டம் கூட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 

Continues below advertisement

கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளி பகுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக, கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், குமரகுரு மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி  குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனது பேச்சு குறித்து சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரிய பிறகும், அரசியல் உள் நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், காவல்துறையிடம் குமரகுரு முறையான அனுமதி பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிபந்தனையை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Continues below advertisement