MODI TN Visit: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வரும் 18ம் தேதி பிரதமர் மோடி கோவை வரும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவரது வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழுவுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, கோவை மாநகர காவல்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதனிடையே, வாகன பேரணிக்கு அனுமதி கோரி பாஜக நீதிமன்றத்தை நாடியுள்ளது. 


மறுப்புக்கு காரணம் என்ன?


கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு பகுதியில் கடந்த, 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக, 1998ம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பில் 46 பேர் பலியாகினர். இதுபோன்ற அச்சுறுத்தலான வரலாறு கோவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, நாளை மக்களவை தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதைதொடர்ந்து, உடனடியாக தேர்தல் நடவடிக்கைகள் அமலுக்கு வரும். இதனை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு பிரச்னைகளை தவிர்க்க மோடியின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.


காவல்துறை விளக்கம்:


இந்நிலையில் கோவை மாநகர காவல்துறை தந்துள்ள விளக்கத்தில், “உள்நாட்டு, வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது. பிரதமர் மோடி 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த பேரணி செல்லும் சாய்பாபா காலணி மற்றும் வடகோவை பகுதிகள் மக்கள் கூட்டம் நிறைந்தது. மருத்துவமனைகள், போக்குவரத்து பணிமனைகள், மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளன.  இது பொதுமக்களுக்கும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். வாகன பேரணியில் பங்கேற்பவர்களை தனித்தனித்யே சோதனை நடத்துவது கடினம், பொதுக்கூட்டங்களில் செய்வதை போன்று பேரணியில் பங்கேற்பவர்களை சோதனை செய்ய முடியாது. 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இரண்டு புறமும் குவியும் மக்களை சோதனை செய்வது என்பது சாத்தியமற்றது” என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அனுமதி மறுப்பை எதிர்த்து பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை இன்று மாலையே நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.