கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் வெயில் காலத்தில் நிழற்கூடம் மற்றும் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம் காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்களும், வங்கிகள், கல்வி நிலையங்களும் இயங்கி வருகின்றன. ஆனால் பேருந்து நிலையம் இல்லாததால் அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏவிஎம் கார்னர் பகுதியில் பேருந்துக்காக மழையிலும் வெயிலிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், அப்பகுதி ஒருவழிப் பாதை என்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு பேரூராட்சி அலுவலகம் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அனைத்துப் பேருந்துகளும் உள்ளே சென்றுவர உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை ஒரு சில பேருந்துகள் மட்டும் உள்ளே சென்று வருகின்றது. பல பேருந்துகள் உள்ளே வருவதில்லை. இதனால் பேருந்து எங்கும் நிற்கும் என்ற குழப்பத்தில் அவதியுற்று வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் கட்சிகளின் வாக்குறுதிகளில் அரவக்குறிச்சி பேருந்துநிலையம் இருந்து வருகிறது. ஆனால் செயல்பாட்டுக்கு இதுவரை வரவில்லை. ஆட்சியர்கள் மாறினாலும் அரவக்குறிச்சிக்கு பேருந்து நிலையம் என்பது கனவாகவே உள்ளது. இனியாவது கனவு நிறைவேறுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் பொதுமக்கள் நிற்பதற்கு எந்த ஒரு நிழல் கூடையும் இல்லாததால் ஆங்காங்கே உள்ள மரத்தடியில் பொதுமக்கள் அமர்ந்து உள்ளனர். அதிக வெயில் தாக்கத்தால் குடிநீர் எந்த ஒரு இடத்திலும் இல்லாததால் அப்போது மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.