கடவூர் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு வாரியில் கருங்கல்லால் 30 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பணைகளை கடவூர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலரின் கணவர் இடித்து அகற்றி கற்களை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


 




கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கீழப்பகுதி கிராமம் பகுதியில் சுந்தரபாண்டியன் குளத்திற்கு செல்லும் மழை நீர் காட்டு வாரியில் நிலத்தடி நீரை சேமிப்பதற்காக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒன்று என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரிசு நில மேம்பாட்டு திட்டம் மூலமாக 10 மீட்டர் நீளம், 7 அடி உயரம், மற்றும் பக்கவாட்டு சுவருடன் கருங்கல்லால் மூன்றுக்கும் மேற்பட்ட (செக் டேம்) தடுப்பணைகள்  தலா 10 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இந்நிலையில் கடவூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்த கோமதி என்பவரின் கணவர் பிரபாகரன் மூன்று தடுப்பணைகளையும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றி கருங்கல்லை அவரது தோட்டத்து பண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். 


 




 


சம்பவ போட்டோஸ் சமூக வலைதளத்தில், நன்றாக இருந்த (செக்டேம்) தடுப்பணைகளை அகற்றி திமுக கவுன்சிலர் கருங்கல்லை எடுத்துச் சென்று விட்டார் என பரவியதை தொடர்ந்து,  கடவூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திமுக வை சேர்ந்த செல்வராஜ் ஆதரவாளராக இருப்பதால் உடனடியாக ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. இடித்து அகற்றப்பட்ட இடங்களில் புதிதாக தலா 12 லட்சம் ரூபாய் வீதம் 36 லட்ச ரூபாய்க்கு  தடுப்பணைகளை கட்டுவதற்கு பணி நடைபெற்று வருகிறது.  இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 




 


ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலரின் கணவர் பிரபாகரன் கேட்டபோது, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே எனது மீது பழியை சுமத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.  மேலும் கடவூர் வட்டார இளநிலை உதவி பொறியாளர் கார்த்திக்கிடம் கேட்டபோது கவுன்சிலரின் கோரிக்கையை ஏற்று புதிதாக அந்த இடத்தில் செக்டேம் தடுப்பணைகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் இருந்த பழைய தடுப்பணை மோசம் அடைந்து விட்டதாக கூறினார். அதனால் தான் புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து தலைவர் செல்வராஜ் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது என விளக்கம் அளித்தார்.