ஜெயலலிதாவின் தோழியாக இருந்து,  திரைமறைவில் ஆட்சியையும் அதிமுக என்ற ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட ஒரு பெருங்கட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அறியப்படும் சசிகலா, இன்று அந்த கட்சியை கைப்பற்ற முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சர்கள்.



சசிகலா - ஜெயலலிதா


69-வது வயதில் சசிகலா


இந்நிலையில்தான், சசிகலா இன்று தன்னுடைய 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை ‘கொண்டாடும்’ மன நிலையில் அவர் இல்லாததால்தான் தன்னுடைய இல்லத்திற்கு யாரும் வாழ்த்து சொல்ல வர வேண்டாம் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். ஆனாலும், தொண்டர்களுக்கு ஒளி மயமான எதிர்காலம் வரவிருக்கிறது என்றும் காத்திருங்கள் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அவர்.


 ஒளிமயமான எதிர்காலம் வருமா ?


கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா சொன்னதுபோல், கண்ணுக்கெட்டிய தூரம் வரை சசிகலா மீண்டும் அதிமுக-வை கைப்பற்றும் காலமே தெரியவில்லை என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். ’தியாக தலைவி’ என்ற பட்டத்தை ’புரட்சி தாய்’ என்று அவர் மாற்றினாரே தவிர அவரால் எந்த விதமான புரட்சியையும் அரசியல் களத்தில் இதுவரை ஏற்படுத்த முடியவில்லை.


அவர் சிறையில் இருந்து வெளியே வரும்போது டிடிவி தினகரன் ஏற்படுத்தி தந்த மிகப் பெரிய வாய்ப்பையும் அப்போது சசிகலா பயன்படுத்த தவறவிட்டார். சட்டமன்ற தேர்தலின்போதும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கூட ஆதரிக்காமல் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை கொடுத்தார். அது அவருக்கு மிகப்பெரிய சருக்கலை அரசியலில் ஏற்படுத்தியது என அவர் கூட இருந்தவர்களே முனுமுனுத்தார்கள்.


பின்னர், திமுக ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் அரசியல் பயணம் செய்யத் தொடங்கிய சசிகலா. மாவட்டம் வாரியாக புரட்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், அவரால் எடப்பாடி பின்னால் அணிவகுக்கும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒரு சிலரை கூட இதுவரை தன்பக்கம் கொண்டு வர முடியவில்லை. தன்னுடைய தனிப்பட்ட அரசியல் எதிர்காலமே ஆட்டம் கண்டிருக்கும்போது, தொண்டர்களுக்கு எப்படி ஒளிமயமான எதிர்காலத்தை அவர் உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டபோது:- 


’தொண்டர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்ற சசிகலாவின் வார்த்தைகள் அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தினாலும் எதார்த்தமான சில விஷயங்களையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர் சிறைக்கு செல்லும் முன்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்க முடியாத சூழல் உருவானது. அப்படி இருந்தும் அவர் சிறையில் இருந்து திரும்பி வரும்போது அவருக்கு மிக பிராம்மாண்டமான வரவேற்பு பெங்களூர் முதல் சென்னை வரை கொடுக்கப்பட்டது.



ப்ரியன், மூத்த பத்திரிகையாளர்


அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர் பங்கு பெற்றிருக்கவேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகதான் அதிமுக தொண்டர்கள், மக்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி ஏதேனும் ஒரு அமைப்பையோ இயக்கத்தையோ கட்டமைத்து செயல்பட்டிருந்தால், தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வி பெற்ற பிறகு, அதிமுக நிர்வாகிகள் சசிகலாவிடம் வந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், சசிகலா அனைவரும் ஒருங்கிணைந்த அதிமுகவை மீண்டும் உருவாக்க நினைக்கிறார். தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்ற ஒரு வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதனை நம்பியே அவர் இருக்கிறார்.


ஒருவேளை, சசிகலா-தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று சொன்னாலும் கூட இதற்கு மேல் எத்தனை பேர் எடப்பாடி பழனிசாமி தலைமை விட்டு சசிகலா பக்கம் வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது. இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட கூடாது என்ற மனநிலையில் இருந்து சசிகலா முதலில் வெளியே வரவேண்டும். அப்படி ஜெயலலிதா நினைத்திருந்தால் அன்று அதிமுக அவர் வசம் சென்றிருக்காது. அவர் இரட்டை இலையை முடக்கி விட்டு சேவல் சின்னத்தை தைரியமாக நின்றதால்தான் தொண்டர்கள் அவர் பக்கம் அணி  திரண்டனர். அது போன்ற ஒரு அதிரடியான நடவடிக்கையை சசிகலா எடுக்க வேண்டும். தினகரன், ஓபிஎஸ்-வோடு இணைந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அவரை தோற்கடித்தால் மீண்டும் ஒரு ஒளிமயமான எதிர்காலம், மறுமலர்ச்சி சசிகலாவிற்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. So, சசிகலா இனியாவது அதிரடியான செயல்பாடுகளில் இறங்கினார் என்றால் வாய்ப்பு இருக்கிறது.


மீண்டும் பாஜகவை நம்பும் நிலைக்கு அவர் சென்றாலோ அல்லது இதே மாதிரியான நிலைப்பாட்டில் தொடர்ந்தாலோ அவர் கூறும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவருக்கும் வாய்ப்பில்லை அவரை நம்பி இருப்போர்க்கும் எதுவும் நடக்கப்போவதில்லை’ என்றார்.



டிடிவி தினகரனோடு S காமராஜ்


சசிகலாவின் ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளருமான S.காமராஜிடம் கேட்டபோது :-


’நிச்சயமாக சசிகலாவால் தொண்டர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியும். ஜெயலலிதாவோடு பல ஆண்டுகள் பயணித்த அனுபவமும் துணிச்சலும் புத்தி கூர்மையும் அவரிடம் உள்ளது. அதே நேரத்தில், ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லையென்றால் அவரை வெளிப்படையாக எதிர்த்து, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு துணையாக நின்று செயல்பட்டால், அம்மாவின் தொண்டர்கள் சின்னமாவின் பின்னால் நிச்சயம் அணிதிரள்வார்கள்’ என்றார்.