கரூர் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களை வைத்து தண்ணீர் தொட்டிக்கு ஏணி போட்டு ஆபத்தான முறையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் தினசரி மார்க்கெட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெயப்பிரகாஷ் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான குடிநீர் தேவைக்காக பள்ளி வளாகத்தில் 3 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதற்கு மேல் 7 அடி உயரத்தில் சுமார் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கு அவ்வப்போது மாநகராட்சி டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் நிரப்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றுள்ளது. அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இளம் சிறார்களான பள்ளி மாணவர்கள் இருவரை வைத்து ஆபத்தான முறையில், சுமார் 10 அடி உயர ஏணியைப் போட்டு டேங்கர் லாரியில் இருந்து பைப் வைத்து, குடி தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களை ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியில் குடி தண்ணீர் நிரப்ப வைத்த பணியை செய்ய அறிவுறுத்தியது யார் என்பது குறித்து, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜலிங்கத்திடம் கேட்டபோது, தங்கள் பள்ளியில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று அலட்சியமாக பதில் அளித்தார்.