கரூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள விவசாய நிலத்தில் பங்கு இருப்பதாக கூறி கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட கும்பலுக்கும், நில உரிமை தாரர்களுக்கும் காவலர் முன்னிலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 7 1/2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு விபீஷ்னன், சுந்தரம், சுவாதிகா, சச்சிதா ஆகிய நான்கு பேர் கிரயம் பெற்றுள்ளனர். விபீஷ்னன் மற்றும் சுந்தரம் இறந்த நிலையில் சுந்தரத்தின் மகள்கள் நான்கு பேர் விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாய நிலத்தில் சுமார் 2 3/4 ஏக்கர் பங்கு இருப்பதாக கூறி சுரேஷ் என்பவர் போலி ஆவணங்களை வைத்து, நிலத்தின் மீது உரிமை கொண்டாடுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும், நள்ளிரவு 1.00 மணியளவில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர்.
அப்போது ரகு, குமார் உள்ளிட்ட அடையாளம் தெரியாத 10 பேர் விவசாய நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்துக் கொண்டிருந்தனர். அதை தட்டி கேட்டு கம்பி வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரச்சனையில் ஈடுபட்டனர். எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, அந்த கும்பல் தற்காலிகமாக அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இன்று காலை நிலத்தின் உரிமைதாரர்கள் கம்பி வேலிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் அப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் தரப்பினர் அப்பகுதிக்கு வந்து பிரச்சனை ஏற்படுத்தியபோது, போலீசார் முன்னிலையில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அடியாட்களை வைத்து நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். விவசாய நிலப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.