கரூர் ஆசாத் சாலையில் மாநகராட்சி கட்டிடத்தில், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு கடை ஒதுக்கீடு செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்த முன்னாள் ராணுவ வீரர் மறைந்த குமாரசாமி அவர்களின் மனைவி பாக்கியம் முன்பு மதுரை நீதிமன்ற உத்தரவுபடி, கரூர் ஆசாத் சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் கரூர் குற்றவியல் நீதித்துறையின் நீதிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் வேலுச்சாமிபுரம் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குமாரசாமி இந்திய விடுதலைக்காக இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவத்தின் சிப்பாயாக பணியாற்றி பர்மா போரில் சிறப்பாக பணியாற்றிமைக்காக வார் மெடல் வாங்கியவர்.
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் குமாரசாமி மனைவி பாக்கியம், என்பவருக்கு கரூர் நகராட்சி கௌரவப்படுத்தும் நோக்கில் கரூர் நகராட்சியாக இருந்த பொழுது நகர் மன்ற துணைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் முன்மொழிந்து நகர் மன்ற தலைவர் எம் செல்வராஜ் வழி மொழிந்து அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மான எண் 3279 (உ) 31.10.2015 ம் தேதியில் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசான பாக்கியம் என்பவருக்கு நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் மேற்பகுதியில் 20 க்கு 10 என்ற அளவில் இடம் ஒதுக்கீடு செய்து வாடகை நிர்ணயம் செய்து வாடகை வசூல் செய்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு இடம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு பின்னர் கரூர் நகராட்சி சார்பில் கரூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு மேற்கு பகுதியில், கட்டப்பட்ட வணிக வளாக கடையில் கடையின் எண்-2 கோரி முன்னாள் ராணுவ வீரரின் வாரிசான பாக்கியம், கடந்த 2017 செப்டம்பர் 12 ஆம் தேதி அளித்த கோரிக்கை மனு அடிப்படையில், மாநகராட்சியில் கடை ஒதுக்கீடு செய்யப்படும் என்று காத்திருந்த நிலையில் கடந்த மார்ச் 15- 2018 ல் கரூர் நகராட்சியில் ஏல அடிப்படையில், வேறொரு நபருக்கு கடை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியதால் கடந்த 2018 ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாக்கியம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை நீதி அரசர் வி.பாரதிதாசன், கரூர் நகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு கடையினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனாலும் இந்த உத்தரவு கிடைக்கப்பட்ட பிறகு கரூர் நகராட்சி குத்தகை விதிகளின் படி கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் ஏப்ரல் 3 ம் தேதி 2018 ல் கடை ஒதுக்கீடு பெறுவதற்கு 15.03.2018 ஏலத்தில் உயர்ந்த பட்ச ஒப்பந்த புள்ளியான அதிகபட்ச வாடகை தொகையான ரூ.10,250 ஏல வைப்புத் தொகை ரூபாய் 2 லட்சம் சொத்து மதிப்பு சான்று ரூபாய் 15 லட்சம், ஒரு வருட வாடகை முன்வைப்புத் தொகை செலுத்தப்படவும், நகராட்சி நிர்வாகத்திற்கு, முன்னாள் ராணுவ வீரரின் வாரிசான பாக்கியம் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், முன்னுரிமை அடிப்படையில் கடை ஒதுக்கீடு செய்யப்படும் என கடிதம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் நகராட்சி நிர்வாகம் கூறிய, சொத்து மதிப்பு சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து, முன்னாள் ராணுவ வீரர் வாரிசான பாக்கியம் உறுதிமொழி பத்திரம் கரூர் நகராட்சியிடம் வழங்கினார். இருப்பினும் கடந்த ஆறு ஆண்டுகளாக, பலமுறை கடை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை மனுக்கள் அளித்தும், கடை ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் தான், கடந்த 2024 அக்டோபர் 2 ம் தேதி ஆசாச் சாலை மேற்கு கரூர் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாக கட்டிட கடையின்-2 பொது ஏலம் விடப்படுவதாக கரூர் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாக்கியம் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் எல்.விக்டோரியா கௌரி ஆகியோர் அக்டோபர் 3 ம் தேதி பிறப்பித்த உத்தரவின் படி, கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி நேரில் சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஆசாத் சாலை மேற்கு பகுதியான கரூர் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாக கட்டிடம் கடை எண்-2 ல் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது முன்னாள் ராணுவ வீரர் குமாரசாமி அவர்களின் வாரிசான, மனைவி பாக்கியம் மற்றும் மகன் மோகனசுந்தரம் ஆகியோரிடம், உரிய விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா உள்ளிட்ட மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள், கரூர் வட்ட நில அளவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.