கரூரில் அனுமதி இன்றி நடைபெற்ற ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு சட்ட விரோதமாக மின் கம்பத்திலிருந்து ஒயர் மூலம் மின்சாரம் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் EB காலனி பகுதியில் அமைந்துள்ள நாகேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. திருவிழா நேற்றுடன் முடிவடையும் நிலையில் இரவு ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அமைக்கப்பட்டு இருந்த மேடை, மின்விளக்குகள், ஒலிபெருக்கிகள் ஆகியவற்றிற்கு மின்சார தேவைக்கு ஜெனரேட்டர் வசதி செய்யாமல், சட்டவிரோதமாக அருகாமையில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் திருடப்பட்டுள்ளது. எனவே, இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் 3 மணி நேரத்திற்கு மேலாக 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கரூர் தாந்தோன்றிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55) இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூர் பகுதியில் சந்தையில் வியாபாரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் மீன் வியாபாரி முருகேசன் என்பவர் இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் நியாயமாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த செல்வி கரூர் குமரன் சாலை பகுதியில் உள்ள 120 அடி செல்போன் டவரில் ஏறி 3 மணி நேரத்திற்கும் மேலாக கீழே இறங்கி வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் மற்றும் அவரது மகன், மகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் ஒலிபெருக்கியில் வரச் சொல்லியும் தொடர்ந்து கீழே இறங்கி வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார். சம்பவ இடத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி, காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு கீழே இறங்கி வர சம்மதித்தார். தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் டவர் மீது ஏறி அவரது இடுப்பில் கயிறு கட்டி பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
அதனைத் தொடர்ந்து செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக தாந்தோணிமலை கடைவீதி சாலை, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.