கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடந்தது. அமைச்சர்கள் அன்பரசன், செந்தில் பாலாஜி ஆகியோர் பூமி பூஜையில் பங்கேற்று பஸ் நிலைய கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். விழாவில் பேசிய அமைச்சர்கள் இந்த பஸ் நிலையம் ஏற்கனவே உள்ள பஸ் நிலையத்தை விட கூடுதல் வசதிகளுடன், சிறப்புகளுடன் அமைக்கப்படுகிறது என்றனர். திருமாநிலையூரில் அமைய உள்ள புதிய பஸ் நிலையம் குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் நக்கீரன் ஆகியோர் கூறியதாவது, மொத்தம் 12.14 ஏக்கரில் இந்த பஸ் நிலையம் அமைகிறது. இப்போதுள்ள உள்ள பழைய பஸ் நிலையத்தில் 54 பஸ்களை மட்டும் நிறுத்த வசதியுள்ளது. ஆனால், புதிய பஸ் நிலையத்தில் மொத்தம் 85 பஸ்களை நிறுத்த வசதிகள் செய்யப்படும்.




நான்கு சக்கர வாகனங்கள் 67, இரண்டு சக்கர வாகனங்கள் 200, மூன்று சக்கர வாகனங்கள் 20 நிறுத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. குளிரூட்டுப்பட்ட பயணிகள் காத்திருப்போர் அறை, குளிரூட்டப்படாத பயணிகள் காத்திருப்பு அறைகள், குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத உணவகங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் உடமைகளை பாதுகாக்கும் அறை, பஸ் பயணச்சீட்டு வழங்கும் அறைகள் 2, அரசு போக்குவரத்து கழக அலுவலக அறைகள், தானியங்கு பணம் எடுக்கும், செலுத்தும் (வங்கி ஏடிஎம்) அறை, நிர்வாக அறை ஆகியவை அமைக்கப்படுகின்றன.




74 கடைகள் கடைகளுக்கு முன்பாக பயணிகள் காத்திருக்க பிளாட் பார்ம்கல், இருக்கை வசதிகள், புறக்காவல் நிலைய கட்டடம், தலா 36 இருக்கைகள் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கட்டண கழிப்பிடங்கள், 4 கட்டணம் இல்லா சிறுநீர் கழிப்பிடங்கள், பஸ் நிலையத்தை சுற்றி மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள், பஸ் நிலைய உள்பகுதியில் எல்இடி மின்விளக்குகள், உயர் கோபுர மின்விளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பிளம்பிங் வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, தீயணைப்பு வசதிகள், பஸ் நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள், பஸ் நிலையத்தில் உள்ள எல்இடி விளக்குகளுக்காக சூரிய மின்சக்தி வசதி, அழகிய தோட்டங்கள், சிறிய ரவுண்டானாக்கள். பஸ்கள் எளிதாக வந்து செல்ல மெயின் சாலையில் இருந்து பஸ் நிலையம் வரை தலா 40 அடிகள் கொண்ட இரு சாலைகள், பஸ் நிலையத்தின் உட்பகுதியில் பஸ்கள் எளிதாக வந்து செல்ல சாலைகள் என்று நவீன முறையில் இந்த பஸ் நிலையம் அமைய உள்ளது.




கட்டுமான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இன்னும் 18 மாதங்களில் அதாவது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றனர். புதிய பஸ் நிலையம் குறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் கேட்டபோதும், தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி படி புதிய பஸ் நிலையத்தை கரூர் நகருக்கு அளித்துள்ளார். கரூர் நகரில் ஏற்கனவே இயங்கி வரும் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையமாக தொடர்ந்து செயல்படும். இந்த புதிய பஸ் நிலையம் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பஸ் நிலையம் என்ற பெயரில் இயங்கிட மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நவீன வசதிகள் கொண்ட இந்த புதிய பஸ் நிலையம், இப்போதைய பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும், ரயில் நிலையத்தில் இருந்து 3.6 கிலோ மீட்டர் தூரத்திலும், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 4.4 கிலோ மீட்டர் தூரத்திலும், மாநகராட்சி மற்றும் கரூர் ஜவகர்பஜார் கடைவீதியில் இருந்து 1.6 கிலோ மீட்டர் தூரத்திலும் என்று மாநகரின் மையப் பகுதியில் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் அமைகிறது.




திருமாநிலையூரில் இருந்து சுக்காலியூர் வரை உள்ள சாலையில் ஒரு மேம்பாலம் ரூபாய் 15 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்தப் பாலத்துக்கான டெண்டர் விடும் பணிகள் விரைவில் தொடங்கும். பஸ் நிலையம் கட்டுமானம் முடிவதற்குள் இந்த பாலத்தையும் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பாலம் நல்ல அகலத்துடன் நான்கு வாகனங்கள் செல்லும் வகையில் இருவழிப்பாதையாக அமைகிறது. பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை வழியாக பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்லும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டவுன் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் புதிய பஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். புதிய பஸ் நிலையம் கரூரின் புதிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் என்றார்.