தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இன்று மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,666ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவி வரும் காய்ச்சலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநில அரசு காய்ச்சல் பரவலைத தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தக் காய்ச்சல் பாதிப்புகளோடு கொரோனா பாதிப்பும் மற்றொருபுறம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 100 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ள நிலையில், சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகாம்களுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று (செப்.20) தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது குறித்து தெரிவித்திருந்தார்.
“தமிழ்நாடு முழுவதும் ஜனவரி முதல் ஆயிரத்து 116 நபர்கள் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 வயதுக்குட்பட்ட 46 குழந்தைகளுக்கும், 5-14 வயதுக்குட்பட்ட 60 குழந்தைகளுக்கும், 14 வயது முதல் 60 வயது வரையிலான 194 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட 71 நபர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களில் 15 நபர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 260 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 96 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 10 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.
காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் மருத்துவமனைகள் என மொத்தம் 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூடுதலாக தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நாளை நடைபெறும். சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம் நடைபெறும். இந்த முகாம்களில் சளி, இருமல், காய்ச்சல் ஏதேனும் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த காய்ச்சல் முகாம்களில் 476 நடமாடும் மருத்துவ குழுவினர் ஈடுபடுவார்கள். 3 நபர்களுக்கு மேற்பட்ட நபர்கள் காய்ச்சல் இருக்கும் பகுதியில் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும்.” எனத் தெரிவித்திருந்தார்.