தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் எனக் கூறும் ஆளுநர், நாளை ஆளுநர் உரையை ஹிந்தியில் தயாரித்து கொடுத்தால்தான் படிப்பேன் என்று கூறுவார். பாஜகவின் அரசியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளுநர் மாளிகை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என கரூரில் எம்.பி ஜோதிமணி பேட்டியளித்தார்.

Continues below advertisement

இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இரண்டாவது முறையாக வெற்றியடையச் செய்த கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மற்றும், நிறைவு நடைபயணத்தை கரூர் பேருந்து நிலையம் அருகே இன்று தொடங்கினார். முன்னதாக அவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது நடைபயணத்தை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியினடன் இணைந்து நடை பயணம் மேற்கொண்ட ஜோதிமணி கச்சேரி பிள்ளையார் கோவில் அருகில் நிறைவு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி.

Continues below advertisement

தமிழ்நாடு சட்டமன்றத்தை பொறுத்தவரை முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியாக தேசிய கீதமும் பாடுவதே காலங்காலமாக மரபாக உள்ளது. இந்த மரபை இதுவரை அனைத்து ஆட்சியாளர்களும், கவர்னர்களும் கடைபிடித்து உள்ளனர். ஆனால், தொடர்ச்சியாக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்தமுரையும் பாதியிலேயே சென்று விட்டார். தற்போதும் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே சென்றுள்ளார். இது சட்டமன்றத்தை மட்டுமல்ல, தமிழக அரசை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமதிக்கும் செயல். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற, தமிழக மக்களின் மொழி, இனம், பண்பாடு, கல்வி ஆகியவற்றின் மீது மோசமான தாக்குதலை நடத்துகின்ற, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பிரதிநிதியாக, ஏஜெண்டாக ஆளுநர் உள்ளார். ஆளுநருக்கு உரிய மாண்போடு அவர் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறேன்.

தமிழக மக்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். ஆளுநரின் வசதிக்கு தகுந்தாற்போல் அனைத்தையும் மாற்ற முடியாது. இன்று தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கூறும் அவர், நாளை ஆளுநர் உரையை இந்தியில் தயாரித்து கொடுத்தால் தான் படிப்பேன் என்று கூறுவார். ஆளுநர் வைத்த சட்டங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசாங்கம் ஆட முடியாது.

 

 

தமிழக அரசையும், முதல்வரையும் அவமதிப்பதை ஆளுநர் கைவிட வேண்டும். பாஜகவின் அரசியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளுநர் மாளிகை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசை மதிக்காத ஆளுநர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றார்.