இன்று, தமிழ்நாட்டில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், அதிமுக பொதுச் செயலாளரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் , எதற்காக இபிஎஸ்க்கு நெருக்கமானவர் வீட்டில் திடீர் சோதனை, யார் அவர்?; பாஜகவுக்கும் வருவான வரித்துறைக்கும் தொடர்பு உள்ளதா?; எதனால்?, இபிஎஸ் சட்டப்பேரவியில் இன்று பங்கேற்கவில்லை என்பதை பார்ப்போம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்:
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எப்படியாவது திமுக ஆட்சியில் இருந்து அகற்றியாக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றனர். மேலும், திமுக கூட்டணியில் உள்ள விசிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளையும் திமுக கூட்டணியில் இருந்து பிரிப்பதற்கான முயற்சியும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில், பாஜக கட்சியானது, திமுக கூட்டணியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என தீவிரம்காட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலை விவகாரத்தை திமுக கூட்டணிக்கு எதிராக கையில் எடுத்து சாட்டையால் அடித்துக் கொண்டது; திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றாமல் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்தது, மிகப்பெரிய பேசு பொருளானது.
அதிமுக இல்லாமல் சாத்தியமில்லை:
இந்த தருணத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், தமிழ்நாட்டின் மிகப் பெரிய வாக்கு வாங்கி வைத்திருக்கும் அதிமுகவின் கூட்டணி இல்லாமல், அது சாத்தியமில்லை என்பதால் , அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, அதிமுகவினருக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலையின் கருத்து, பாஜக - அதிமுக கூட்டணி உடையும் அளவுக்கு சென்றுவிட்டது. மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் வராது என்றும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று இபிஎஸ் தலைமையிலான அதிமுக முடிவெடுத்துள்ளது.
பாஜக தீவிர முயற்சி
இந்நிலையில், அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக தலைமை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது . ஓபிஎஸ் - இபிஎஸ் என அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து , திமுக எதிராக கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்புகூட தினகரன் டெல்லிக்கு சென்றுவிட்டு வந்த பிறகு , அதிமுக பாஜகவுடன் கூட்டணிக்கு வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால், அதற்கு இபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபைக்கு வராத இபிஎஸ்:
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நேற்று தொடங்கியது. ஆனால், நேற்று அண்ணா பல்கலை விவகாரத்தை கையில் எடுத்த இபிஎஸ், யார் அந்த சார் என்ற பேட்சுடன் சட்டசபையில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி, சட்டசபையில் அதிர்வலையை ஏற்படுத்தியது பேசுபொருளானது.
ஆனால், இன்றோ சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவரான் இபிஎஸ் வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணமாக , இபிஎஸ் நெருங்கிய உறவினரான ராமலிங்கத்திற்குச் சொந்தமான 25 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனைதான் என்றும் கூறப்படுகிறது.
இந்த வருமான வரிச் சோதனையானது, இபிஎஸ்-ஐ பாஜக கூட்டணிக்குள் வரவைப்பதற்கான மறைமுக அழுத்தமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இடமளித்துள்ளது.
மறைமுக ஆயுதத்தை எடுத்த பாஜக
பாஜக கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என அழுத்தம் கொடுப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு எடப்பாடி மறுத்து வரும் நிலையில், பாஜகவின் மறைமுக ஆயுதங்களில் ஒன்றான, அரசு எந்திரமான வருமான வரித்துறையை கையில் எடுத்து உள்ளது.
இன்று இபிஎஸ் நெருங்கிய உறவினரான ராமலிங்கத்திற்குச் சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவகின்றனர்.
இதனால், இன்று சட்டப்பேர்வையில் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரின் இரங்கல் தீர்மானம் இருந்தும்கூட, இபிஎஸ் சட்டசபைக்கு வரவில்லை.
ஏன் சட்டசபைக்கு வரவில்லை?
இபிஎஸ்-ன் நெருங்கிய உறைவினர் ( சம்பந்தி என கூறப்படுகிறது) வீட்டில் நடந்து வரும் ஐடி ரெய்டே காரணம் என்று சொல்கின்றனர். ஈரோடு மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள என்.ராமலிங்கம் என்பவரின் என்.ஆர்.கன்ஸ்டரக்ஷன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு வேட்டை நடத்தி வருகின்றனர். ஈரோடு மட்டுமின்றி கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.
இபிஎஸ் தலைமையிலான ஆட்சியின் போது, தனது உறவினரான ராமலிங்கத்திற்கு முறைகேடான டெண்டர்கள் கொடுத்ததாகவும், கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் விமர்சனம் இருக்கிறது. அதனால் தான் ராமலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டால், இதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என இபிஎஸ் தலைவலியில் இருக்கிறாராம். அதனால் சட்டப்பேரவை வேலையை ஓரமாக வைத்துவிட்டு ரெய்டை கவனிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார் இபிஎஸ்.
பாஜகவின் அழுத்தத்திற்கு இபிஎஸ் அடிபணிவாரா; திமுகவுக்கு எதிராக அதிமுகவின் பிளான் என்ன என்பதைவிட பாஜகவுக்கு எதிராக, அதிமுகவின் பிளான் என்ன என்பது குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.