தமிழக காவல் துறையின் சார்பாக சில நாட்களுக்கு முன் சுற்றறிக்கை ஒன்று அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரத்தியேகமாக "ஆப்ரேஷன் கந்து வட்டி" என்ற முறையில் கந்துவட்டி புகாரில் தனியாக கவனம் செலுத்தி புகாரை வந்த சில நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில காவல் துறையின் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு அனைத்து மாவட்ட காவல் துறையும் செயல்பட்டு வரும் நிலையில் கரூரில் ஆபரேஷன் கந்துவட்டி புகாரின் பேரில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆபரேஷன் கந்துவட்டி கரூரில் நடந்தது என்ன விரிவாக காணலாம்
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட, ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுசீலா (67). சுசிலாவின் ஒரே மகன் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (50) என்பவரிடமிருந்து 10% வட்டிக்கு ரூ.10,000/- கடனாக பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்காக மூதாட்டி சுசீலா ரூ.20,000/- தொகையை சரியாக வட்டியுடன் சேர்த்து திருப்பி அளித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று செல்வகுமார் மூதாட்டி சுசீலா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கூடுதல் தொகையாக ரூ.10,000/- கேட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி சுசீலா அளித்த புகாரின் பேரில் கந்து வட்டி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் செல்வகுமார் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், கரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முதல் நாள் செய்தியாளர் சந்திப்பின் போது ,கரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பணியில் இருப்பார்கள் என தெரிவித்தார். மேலும், கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி புகார் வந்தால் உடனடியாக தன்னிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், கரூர் மாவட்டத்தில் இதுவரை கந்துவட்டி பாதிக்கப்பட்டு புகார் அளித்தவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறித்து காவல்துறை அதிகாரியிடம் தகவலை கேட்டு பெற்றதாகவும் கந்து வட்டி புகார் தொடர்பாக பொதுமக்கள் நேரடியாக தன்னிடம் புகார் அளிக்கலாம் எனவும், ஆன்லைன் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் கரூரில் கந்துவட்டி கொடுமையால் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலங்களில் ( கடன் தொல்லையால் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு) விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்