திமுக செய்தித் தொடர்பாளருக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.


இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், "திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிரான குற்ற புகாரை இந்த கடிதத்துடன் இணைத்து உள்ளேன். இந்த புகாரை தாக்கல் செய்ய, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 196இன் படி, உங்கள் அனுமதி தேவைப்படுகிறது.






இணைக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட  ராஜீவ் காந்தி, இந்திய தண்டனைச் சட்டத்தின் படி குற்றங்களை செய்திருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கிறது. கடந்த ஜூன் 3ஆம் தேதி, தமிழ் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பொது வெளியில் ட்விட்டர் மூலம் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 


சுப்பிரமணியின் சுவாமி, மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எதற்கு எல்லாம் குற்ற வழக்கு பதிவு செய்யலாம் என அந்த தீர்ப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, நியாயத்தின் அடிப்படையிலும் அரசியலமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும் என கனிவுடன் கேட்டு கொள்கிறேன். பொது அமைதியை கெடுக்கும் வகையில் குற்றம்சாட்டப்பட்டவர் பல கொடூர குற்றங்களை செய்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.






இந்த கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்ட சுப்பிரமணியின் சுவாமி, "பிராமணர்களிலேயே கடினமானவர்களும் உள்ளனர் என்பதை ராஜீவ் காந்திக்கு தெரிவியுங்கள் ஸ்டாலின் அவர்களே. குருமுர்த்தி போன்று அனைவரும் கோழைகள் அல்ல" என பதிவிட்டுள்ளார்.