குளித்தலையை அடுத்த ஐயர் மலை இரத்தினகிரிஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமண திட்டத்தில் இரண்டு ஜோடி மட்டுமே பயனாளியாக தேர்வு செய்யப்பட  உள்ளதால், ஏழை மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். ரத்தினகிரீஸ்வரர் கோயில் அலுவலகத்தின் முன் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 




அதில் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டவாறு ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின்படி திருமாங்கல்யம் பத்தாயிரம் ரூபாய், மணமகன் ஆடைக்கு 2000 ரூபாய், மணமகள் ஆடைக்கு 2000 ரூபாய், மணமக்கள் வீட்டார் 20 பேருக்கு விருந்து உணவுக்கு 2000 ரூபாய், பூமாலை புஷ்பம் ஆயிரம் ரூபாய் சீர்வரிசை, பாத்திரங்கள் மூன்றாயிரம் ரூபாய் இதர செலவு 1000 ரூபாய் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாயை திட்ட மதிப்பீடு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதர விவரங்களை கோயில் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பதாகையை பார்த்து தினமும் பத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கோயில் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ள பதாகையில் திருமண நாள் எப்போது எத்தனை ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்படும் போன்ற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. பதாகையை பார்க்கும் ஏழை மக்களுக்கு இரண்டு ஜோடிக்கு மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படும் என்ற தகவல் தெரியாமல்  எஞ்சியவர்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது.




இதுகுறித்து அய்யர் மலை கோயில் செயல் அலுவலர் அனிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,
இலவச திருமண திட்டம் குறித்த முழு விவரத்தினை பொதுமக்களுக்கு தெரிவிக்க பதாகை வைக்கப்பட்டுள்ளது. அய்யர்மலை கோயில் மூலம் இரண்டு ஜோடிகள் மட்டும் இலவச திருமண திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்வு செய்யப்படும் ஜோடிக்கு வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. பதாகையில் விடுபட்டுள்ள  தவறுகள் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




இரண்டு ஜோடிக்கு மட்டுமே திருமணம் என்பதால் இலவச திருமண திட்டத்தில் பயன் பெறுவோம் என்ற நம்பிக்கையில் விண்ணப்பங்களை அளிப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் காத்திருக்கிறது. குளித்தலை கடம்பர் கோயிலிலும் இரண்டு ஜோடிக்கு மட்டுமே இலவச திருமண நடத்தி வைக்கப்பட உள்ளது. ஏழை எளிய மக்கள் ஏராளமானோர் இருக்கும் நிலையில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், இத்திட்டமானது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு செயலாகிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.