சம்பா தொடங்கிய நிலையில், வங்கிகளில் பயிர் கடன் தர மறுக்கின்றனர். ஏற்கனவே, கடன் வாங்கி உரிய தவணையில் திருப்பி செலுத்தியவர்களுக்கும், கடன் வழங்க வங்கிகள் மறுக்கின்றன என, குறைதீர் கூட்டத்தில் விவசாயி புகார் தெரிவித்தார். கரூர் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், கூட்ட அரங்கில் நடந்தது.




பெரியசாமி: வெள்ளியணை குளத்தில் சட்ட விரோதமாக மண் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் விற்பனை செய்யப்படுகிறது. போலீசில் புகார் செய்தும் பயனில்லை. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.


கலெக்டர் பிரபு சங்கர்: சட்ட விரோதமாக மண் எடுப்பது தெரிய வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.


சின்னதுரை: ராயனூர் பகுதியில் உள்ள, டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் தினமும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. டாஸ்மாக் கடையை இடம் மாற்ற வேண்டும்.




ராஜா: கரூர் மாவட்டத்தில் குருவை சாகுபடி தொடர்ந்து, சம்பா சாகுபடி தொடங்கியுள்ளது. ஆனால், அனைத்து பகுதிகளிலும், மயில்கள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே, மயில்களைப் பிடித்து வனப் பகுதிகளில் விட வேண்டும். தென்னிலை பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை மூட வேண்டும்.


நல்லுசாமி: சாயக் கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை கண்டு கொள்ளாமல், அரசுத்துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.




டி.ஆர்.ஓ., லியாகத்: சாயக்கழிவு நஷ்ட ஈடு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் அபராதம் வசூல் செய்யும் பணிகள் நடக்கிறது. விரைவில், நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


ராமலிங்கம்: சம்பா தொடங்கிய நிலையில், வங்கிகளில் பயிர் கடன் தர மறுக்கின்றனர். ஏற்கனவே, கடன் வாங்கி உரிய தவணையில் திருப்பி செலுத்தியவர்களுக்கும், கடன் வழங்க வங்கிகள் மறுக்கின்றன.


டி.ஆர்.ஓ.,: விவசாயிகளின் அடங்களில் உள்ளபடி, கடன் வழங்கப்படுகிறது. அதில், காலதாமதம் இல்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.




பாலசுப்ரமணி: கரூர் மாவட்டத்தில், ஹீமோகுளோபின் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளி சான்று வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றன. 


கலெக்டர்: விரைவில் ஹீமோகுளோபின் குறைபாடு நோயாளிகளுக்கு, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, மாற்று திறனாளி சான்று மற்றும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் ஆர்.டி.ஓ.,க்கள் ரூபினா, புஷ்பா தேவி, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், விவசாயிகள் தரப்பில் கூட்டத்தில் வைக்கப்பட்ட, 145 கோரிக்கைகளுக்கும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பதிலளித்தனர்.