கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையத்தில், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற அமைப்புடன், கடந்த ஒரு மாத காலமாக கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. 4 அடி உயரத்திற்கு பீடம் அமைக்கப்பட்டு, அதில் நான்கு புறமும் சிமெண்ட் பில்லர் எழுப்பப்பட்டு மேற்பரப்பில் கான்கிரீட் மேற்கூரை போடப்பட்டது.
இந்த அமைப்பு இந்து மத வழிபாட்டு தளத்திற்கான விநாயகர் கோவில் கட்டுமானம் என தகவல் வெளியானதை அடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், சாமானிய மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமாவதி உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அப்போது அரசு அலுவலக வளாகத்தில் மத வழிபாட்டு தளம் கட்டக் கூடாது என 1998-இல் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற பொதுநல வழக்கிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு, நீதிமன்ற ஆணையும் உள்ளதால், கட்டுமான பணியை நிறுத்தி, இடித்து அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அப்போது ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் அதிகாரிகள் அலுவலக வளாகத்தில் மத வழிபாட்டு தளம் கட்டப்படவில்லை எனவும், கார் நிறுத்துவதற்கும், பொதுமக்கள் இளைப்பாறுவதற்காக நிழல் பந்தல் போடுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், கட்டுமான பணிக்கான அமைப்பு இந்து மத வழிபாட்டு தளத்திற்கான அனைத்து அடையாளங்களுடன் தெளிவாக இருப்பதால், அரசாணை மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்று வரும் கட்டுமான பணியை நிறுத்தி, இடித்து அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் கேட்ட போது, இது ஓட்டுநர்களுக்கான ஓய்வு எடுப்பதற்காக ஷெட் போடுவதாக தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் வருகை தந்தால் சாப்பிட ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததாகவும், கார் நிறுத்தும் இடம் என மாற்றி மாற்றி சொல்லி வருகின்றனர். இந்த பணிக்கான ஒப்பந்தம், மதிப்பீடு, ஒப்பந்ததாரர் யார் என கேள்வி எழுப்பியதற்கு பதில் தர மறுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இரவு சமூக ஆர்வலர்களின் புகார் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொக்ளின் இயந்திரம் மூலம் அந்த கட்டுமானத்தை அதிகாரிகள் இடித்து அகற்றியுள்ளனர்.
இந்த கட்டுமானத்தில் ஈடுபட்டது யார், அதன் ஒப்பந்ததாரர் யார், இதற்கு எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கூண்டோடு தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், தவறும்பட்சத்தில் முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு செல்வோம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.