அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


சாதனைப் பயணம்:


“அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளேன். இது வெற்றிகரமான மற்றும் சாதனைக்குரிய பயணமாக அமைந்துள்ளது. தனிப்பட்ட எனக்கு அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு இது சாதனைப்பயணமாக அமைந்துள்ளது.


உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது தொழில்களைத் தொடங்க தொழில் முதலீடுகளைச் செய்ய முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 28.8.2024 அன்று அமெரிக்க சென்றேன். 12.9.2024 வரை அங்கு இருந்தேன். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

11 ஆயிரம் பேருக்கு வேலை:


உலகின் தலைசிறந்த புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பை நடத்தியுள்ளேன். இதில் 18 நிறுவனங்கள் பார்ச்சூன் 500 போன்றவையும் அடங்கும். இந்த சந்திப்பின்போது 19 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை நான் பகிர்கிறேன்.


சான் பிரான்ஸிஸ்கோவின் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவின் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக 7 ஆயிரத்து 618 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. இதன்மூலமாக 11 ஆயிரத்து 516க்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.


ஃபோர்டு உற்பத்தி மீண்டும் தொடக்கம்:


இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி,செங்கல்பட்டு, கோயம்புத்தூர் என்று பல மாவட்டங்களில் செய்யப்பட உள்ளது. சான்பிரான்ஸிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு நான் கேட்டுக்கொண்டேன்.


இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகாலமாக செயல்பட்டு தவிர்க்க முடியாத சூழலில் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம் எங்கள் வேண்டுகோளை ஏற்று சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளனர்.  இரண்டு நாளுக்கு முன்பு நாங்கள் குழு அமைத்து பின்னர் சொல்கிறோம் என்றார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:


அதன்பின்பு, நாங்கள் அனைத்து வசதியும் செய்து தருகிறோம் என்ற உத்திரவாதம் அளித்த பிறகு நாங்கள் சிகாகோவில் இருந்து விமானம் ஏறியதும் அறிவிப்பை வெளியிட்டனர். அவர்கள் உற்பத்தியை தொடங்க அனைத்து வசதிகளும் செய்து தர நான் ஆணையிட்டுள்ளேன். எனது கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மேற்கொண்டு வளமான எதிர்காலம் உருவாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுளுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.


ஆட்டோ டெக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க விரும்பும் மாநிலமாகவும் தமிழ்நாடு மாறியுள்ளது. சான்பிரான்ஸிஸ்கோ, சிகாகோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர் சங்கத்தினர் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். இது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அமெரிக்க வாழ் தமிழர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன். ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.


எடப்பாடிக்கு பதில்


தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், சட்டமன்றத்திலும் தொழில்துறை அமைச்சரும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றார். ஆனால், அதில் 10 சதவீதம் கூட ஈர்க்கப்படவில்லை., அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதைச் சொன்னால் அவருக்கு பெரிய அவமானமாக இருக்கும். ஜி.எஸ்.டி. குறித்த நியாயமான கோரிக்கையை அவர் முன்வைத்தார். அதை  ஒன்றிய அமைச்சர் கையாண்ட விதம் வெட்கக்கேடானது.


புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்வது குறித்து அமைச்சரும், அதிகாரிகளும் சந்தித்து பேசி வருகிறார்கள். பிரதமரைச் சந்தித்து நானும் வலியுறுத்துவேன். எதிர்பார்த்ததை விட அதிகமான முதலீடுகள் வந்துள்ளது.”


இவ்வாறு அவர் பேசினார்.



இவ்வாறு அவர் கூறினார்.