முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனாகிய உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். எம்.எல்.ஏ.வாக அவர் வெற்றி பெற்ற உடனே அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா?


ஆனால், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமலே இருந்தது. அவருக்கு அமைச்சரவையில் எப்போது இடம் வழங்கப்படும்? என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. அவருக்கு விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது.


விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பை உள்ளிட்ட பல திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:


இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ தி.மு.க. சொன்னதைத்தான் செய்வோம். சொல்வதைத்தான் செய்வோம். 75வது ஆண்டை கொண்டாடும் வகையில் தி.மு.க. பவள விழா கொண்டாட இருக்கிறது. நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என்று நம்புகிறேன்.”


இவ்வாறு அவர் பதிலளித்தார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பதில் மூலமாக விரைவில் அமைச்சரவையில் மாற்றம் வரும் என்றும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பதில் தி.மு.க.வினர் மத்தியிலும், உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சட்டமன்ற தேர்தல்:


தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டுகாலம் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இருந்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் அடுத்த சட்டமன்ற தேர்தலை கடும் சவாலானதாக மாற்றியுள்ளது. அதற்கு முன்பாக, தி.மு.க.வில் உதயநிதித ஸ்டாலினை இன்னும் அதிகாரமிக்கவராக மாற்றும் முனைப்பை தி.மு.க. மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக அவர் விரைவில் துணை முதலமைச்சராக பதவியில் அமர்த்தப்படுவார் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.