காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் இருபுறமும் கரைபுரண்டு தண்ணீர் ஓடியும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. தமிழகத்தில், 3வது பெரிய ஏரியாக கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சபட்டி ஏரி, 1.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க கூடிய, 1,170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதுபோல, 300 ஏக்கர் பரப்பளவில் சின்ன தாராபுரம் அருகே தாதம்பாளையம் ஏரி, 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளியணை குளம், 200 ஏக்கர் பரப்பளவில் உடையாபட்டி குளம், 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாவத்தூர் குளம் உட்பட, 25க்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின் போது, காவிரி ஆற்றில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் கரூர் வழியாக சென்றபோதும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனின்றி முழுமையாக வீணாகி கடலில் கலந்து வருகிறது.
தொலை நோக்கு பார்வையுடன் ஏரி மற்றும் குளங்களை இணைக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, கிடைக்கும் தண்ணீரை சேமித்து நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்த அரசும் கவனம் செலுத்துவதில்லை. இயற்கை நமக்கு தண்ணீர் கொடுத்த போதும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கால் கரூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாக இருந்து வருகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை காரணமாக, காவிரி ஆற்றில், 1.67 லட்சம் கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றில், 10 ஆயிரம் கன அடி தண்ணீர் என இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் கரூர் மாவட்டம் வழியாக கரைபுரண்டு ஓடிய போதும், காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் இருந்து, 27 கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும், 10 க்கும் மேற்பட்ட பெரிய ஏரி மற்றும் குளங்கள் வறண்டு போய் கிடக்கின்றன.
அரசின் தொலைநோக்கு பார்வை இல்லாத ஒரே காரணத்தால் கரூர் மாவட்டம் வறட்சியின் கோரப் பிடிக்கு தள்ளப்பட்டுள்ளது. காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் இருந்து பெரிய நீர் தேக்க தொட்டி அமைத்து, 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாதம்பாளையம் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, அங்கிருந்து வெள்ளியணை குளத்திற்கு கொண்டு சென்றால் போதும், அங்கிருந்து அதைச் சுற்றியுள்ள, 10 க்கும் மேற்பட்ட சிறு குளங்கள் வழியாக பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு சென்று, குளங்களை இணைத்து விட்டால் வறட்சி மாவட்டமாக இருந்து வரும் கரூர் மாவட்டம் பசுமை நிறைந்த மாவட்டமாக உருவெடுக்கும்.
மாவட்டத்திலுள்ள இரண்டு பெரிய ஏரிகள், 10க்கும் மேற்பட்ட குளங்களை இணைக்கும் திட்டத்திற்கு அரசு உயிர் கொடுக்கும் பட்சத்தில், கரூர் மாவட்டம் முழுவதும் வறட்சியின் பிடியிலிருந்து மீட்டு, ஒரு லட்சம் ஏக்கர் விலை நிலம் பயன்பெறும். இத்திட்டத்திற்கு, 150 கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. அவ்வப்போது, காவிரி ஆற்றில் ஏரிக்கு நீர் கொண்டு செல்ல ஆய்வுப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் பின் திட்டத்தை கிடப்பில் போட்டு விடுகின்றன. இனியாவது சிறப்பு கவனம் கொண்டு ஏரி மற்றும் குளங்களை இணைக்கும் திட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்