கரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல் மழை.

மாண்டஸ் புயல் காரணமாக, கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு லேசான அளவில் சாரல் மழை பெய்தது. கரூர் மாவட்டம் முழுவதும் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் 9 மற்றும் 10 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கரூர் மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கரூர் மாவட்டத்தில் குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று மட்டும் தான் மாவட்டம் முழுவதும் மிக பலத்த மழை பெய்தது. அதற்கு பிறகு குறிப்பிடத்தக்க மலை எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, விட்டுவிட்டு லேசான சாரல் மலையும் பெய்து வருகிறது. இதோடு அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவும் இருந்து வருகிறது.

இது போன்ற நிகழ்வுகள் காரணமாக கரூர் மாவட்டத்தில் சீதோசன நிலையில் கடும் மாற்றம் ஏற்பட்டு, கடும் குளிர் காரணமாக மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். கரூரில் நேற்று முன்தினம் 2.8 மில்லி மீட்டர் மழை, அரவாக்குறிச்சி 7.2 மிமீ, அனைப்பாலையம் 2 மிமீ, கா. பரமத்தி 1 மி மீ, குளித்தலை 1.4 மி மீ, தோகைமலை1 மி மீ, கிருஷ்ணராயபுரம் 3.6 மிமீட்டர் மாயனூர் 6 மி மீ, பஞ்சப்பட்டி 3.6 மிமீ, கடவூர் 2.8 மிமீ பால விடுதி 3.2 மிமீ,  மைலம்பட்டி 2.6 என மாவட்டம் முழுவதும் சராசரியாக 37.20மி மீ மழை பெய்திருந்தது. 

இதன் மொத்த சராசரி 3.10 ஆக உள்ளது. இந்த சாரல் மலையின் காரணமாக கரூர் மாவட்டம் கடந்த இரண்டு நாட்களாக ஊட்டி, கொடைக்கானல் அளவு மாறி உள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி கொண்ட அமராவதி அணையில் இரவு 9 மணி நிலவரம் படி 89.47 கன அடி தண்ணீர் உள்ளது. அனைக்கு மணிக்கு 325 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 320 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 3999 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

 தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காலையிலிருந்து பரவலாக மழை பெய்தது. இதனால் பலர் தங்களது வீடுகளிலேயே முடங்கினார். இதனால்  கடைவீதிகள் வெளிச்சோடி காணப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை தோகைமலை வர சந்தை நடந்தது. மழையால் குறைவான வியாபாரிகளே காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதில் ஒரு சில காய்கறிகள் குறைந்த விலையிலும் ஒரு சில காய்கறிகள் அதிக விலைக்கும் விற்பனையானது. இருப்பினும் மழையின் காரணமாக குறைவான பொதுமக்களே சந்தைக்கு வந்து சென்றனர். இதனால் வாரச்சந்தையில் காய்கறி விற்பனை மந்தமாக நடந்தது.

 

நொய்யல், குறுக்கு சாலை, ஆத்துப்பாளையம், நத்தமேடு, குந்தாணிபாளையம், நடையனூர் ,புகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதேபோல் நேற்று காலை முதல் தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இருசக்கர வாகனங்களில் சாலையில் சென்றவர்களும் நடந்து சென்றவர்களும் அவதி அடைந்தனர். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கடம்பன்குறிச்சி, மன்மங்கலம் ஆகிய பகுதிகளில் இரண்டாவது நாளாக காலை 6 மணியில் இருந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் தள்ளுவண்டி வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாகவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.