களப்பணியில் ஆயிரக்கணக்கானோர்:
மாண்டஸ் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் இரவு முழுவதும் மாநகராட்சி, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் களத்தில் பணியாற்றினர்.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்து விட்ட நிலையில், ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருப்பதால் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம்:
குறிப்பாக காட்டுப்பாக்கம் 16 செ.மீ, வில்லிவாக்கம் 6 செ.மீ, புழல் 10 செ.மீ, பூந்தமல்லி 10 செ.மீ, சத்தியபாமா பல்கலைக்கழகம் 7 செ.மீ, பள்ளிக்கரணை 7 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழைப்பொழிவு பெய்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 70 முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது எனவும், வட உள்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் முன்னதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புயல் பாதிப்புகளை துரிதகதியில் எதிர்கொள்ளும் வகையில், நேற்று (டிச,09) இரவு தொடங்கி 11 ஆயிரம் மின் துறை ஊழியர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மின்விநியோகம்:
மேலும் மின் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவில் மின்சாரம் சீரமைக்கப்படும் என்றும், இன்று மதிய வேளைக்குள் அனைத்து பகுதிகளிலும் சீராக மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மரங்களை அகற்றும் பணிகள் நள்ளிரவு தொடங்கியே நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்புகளால் சென்னை போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என முன்னதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.