மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டி, திருச்சுனை, அய்யாபட்டி உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்கப்படுவதற்கான ஏல அறிவிப்பை கடந்த மாதம் 11-ம் தேதி மதுரை மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டது. விளைநிலங்களாலும் கண்மாய் குளங்களாலும் சூழப்பட்டுள்ள இடங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்கப்படுவதை எதிர்த்து இப்பகுதி  மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் அக்டோபர் 16-ம் தேதி மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில்  கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற மாதாந்திர விவசாய குறை தீர்ப்பு கூட்டத்திலும் விவசாயிகள்  தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி கிரானைட் குவாரி அமைக்க கூடாது என கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்ட நடைபெற்ற  அரங்கித்திற்குள் செல்ல விடாமல் காவல்துறை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கை மனுக்களுக்கு உரிய பதில் அரசிடம் இருந்து கிடைக்காததால் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் சேக்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மக்கள் போராட்டத்தை தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக அக்டோபர் 31-ம் தேதி நடைபெற இருந்த  கிரானைட் குவாரி ஏலஅறிவிப்பு  ஒரு மாத காலம் தள்ளி நவம்பர் 30-ம் தேதி நடைபெறும்  என மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பாக அறிவிக்கப்பட்டது.



 

இந்நிலையில் இந்த மூன்று குவாரிகள் அமைய உள்ள மலைகளை  ஆய்வு செய்த மதுரை இயற்கை மற்றும் பண்பாட்டு பேரவை அமைப்பினர் இந்த இடங்களில் உள்ள பண்பாடு, தொல்லியல், விவசாயம்  முக்கியத்துவம் குறித்த தகவல்களை அறிக்கையாக தயார் செய்து  கிரானைட் குவாரி அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து  மதுரை மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர். 



 

இதைத் தொடர்ந்து  அன்றே மாவட்ட ஆட்சியாளர் மேற்கண்ட 3 குவாரிகள் அமைய உள்ள இடங்களை சுற்றி பார்த்து மக்கள் மற்றும் விவசாயிகள் கருத்தினை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு எதிராக எந்த முடிவையும் அரசு எடுக்காது என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விவசாயத்துறை புவியியல் மற்றும் சுரங்கத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொல்லியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நல்ல முடிவு கிடைக்கும் என்று இப்பகுதி மக்கள் பெரிதும் நம்பி இருந்த நிலையில், இப் போராட்டத்தில் மக்களோடு நின்று வேலை செய்து வந்த கம்பூர் செல்வராஜ் மீது கு.வி.மு.சட்டபிரிவு 110 பதியப்பட்டு அழைப்பானை அனுப்பப்பட்டது. இதனால்  போராட்டம் நடத்திய மக்கள்  அதிர்ச்சி அடைந்தனர். கிரானைட்  குவாரி ஏல அறிவிப்பை அரசு திரும்பப் பெறுமா என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் கிரானைட் குவாரி ஏலத்தை எதிர்த்து போராடிவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து  பல்வேறு சமூக இயக்கங்கள் இணைந்து மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மக்களின் கோரிக்கையை ஏற்று  சேக்கிபட்டி திருச்சினை அய்யாபட்டி கிராமங்களில்  கிரானைட் குவாரி அமைக்க கூடாது ,கிரானைட் முறைகேடுகளை  கண்டறிந்த திரு சகாயம் ஐஏஎஸ் குழுவின் அறிக்கையை வெளியிடுவது, சமூக செயற்பாட்டாளர் கம்பூர் செல்வராஜ் மீது  பதியப்பட்டுள்ள கு.வி.மு ச 110  வழக்கை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்ததியுள்ளனர்.