டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் பாடியது கலகலப்பை ஏற்படுத்தியது.  


விழாவில் பின்னணிப் பாடகி பி.சுசீலா, இசைக் கலைஞர் பி.எம்‌. சுந்தரம்‌ ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதை பல்கலைக்கழக வேந்தரான முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் சிறப்பு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:


’’இன்றைக்கு இசைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ சார்பில்‌, பத்மபூஷன்‌ பி.சுசீலா, பி.எம்‌. சுந்தரம்‌ என இரண்டு இசை மேதைகளுக்கு டாக்டரேட்‌ பட்டம்‌ கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறோம்‌. இதன்‌ மூலமாக, டாக்டர்‌ பட்டமும்‌ பெருமை அடைகின்றது.


எனக்கு மிகவும்‌ பிடித்த பாட்டு


பாடகி சுசீலா அவர்களுடைய குரலில்‌ மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில்‌ நானும்‌ ஒருவன்‌. அவருடைய பாட்டை நான்‌ எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில்‌ பயணம்‌ செய்யும்போது, காரில்‌ கேட்டுக்கொண்டே போவேன்‌. எனக்கு மிகவும்‌ பிடித்த பாட்டு, அடிக்கடி நான்‌ பல இடங்களில்‌ அதை பாடியிருக்கிறேன்‌.


“நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை;


உன்‌ நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை;


காயும்‌ நிலா வானில்‌ வந்தால்‌ கண்ணுறங்கவில்லை;


உன்னை கண்டு கொண்ட நாள்‌ முதலாய்‌ பெண்ணுறங்கவில்லை”.


அதனால்‌ மேடைக்கு வந்தவுடனே அம்மையாரை பார்த்தவுடன்‌ வணக்கம்‌ சொல்லி விட்டுதான்‌, நான்‌ உங்கள்‌ ரசிகன்‌ என்று சொன்னேன். வெளிப்படையாகவே சொன்னேன்‌.


இந்த இரண்டு மேதைகளுக்கு டாக்டரேட்‌ பட்டம்‌ கொடுத்து பெருமைப்படுத்தி இருக்கிறோம்‌. இதன்‌ மூலமாக டாக்டரேட்‌ பட்டமும்‌ பெருமை அடைகிறது. பாடகி சுசீலா குரலில்‌ மயங்காதவர்களே நிச்சயமாக எல்லோருக்கும்‌ பட்டங்கள் வழங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக நான்‌ மிகவும்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌! பெருமைப்படுகிறேன்‌.


இசைக்கும்‌, என்‌ குடும்பத்துக்கும்‌ நெருக்கமான உறவு


இசைக்கும்‌, என்‌ குடும்பத்துக்கும்‌ நெருக்கமான உறவு உண்டு! என்னுடைய தாத்தா முத்துவேலர்‌ பாட்டு எழுதுவதில்‌ மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும்‌ வல்லவர்‌. அதேபோலதான்‌, தலைவர்‌ கலைஞரும்‌ கவிதைகள்‌ மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களை கூட எழுதி இருக்கிறார்‌. அவர்‌ பாட்டு பாடுவது இல்லையே தவிர, அனைத்து இசை நுணுக்கங்களும்‌ அவருக்கு நன்றாக தெரியும்‌. இசையை கேட்டவுடனே, அதில்‌ சரி எது, தவறு எது என்று சொல்லிவிடுவார்‌. அந்தளவுக்கு வல்லமை பெற்றிருந்தார்‌.


அடுத்து, விண்ணோடும்‌ முகிலோடும்‌ விளையாடும்‌ வெண்ணிலவே' உள்ளிட்ட பாடல்களை பாடியது என்னுடைய மாமா “தமிழிசைச்‌ சித்தர்‌” சிதம்பரம்‌ ஜெயராமன்‌‌. அந்த வகையில்‌ எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது. அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.’’


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.