கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மகாதானபுரம் நியாய விலை கடையில் மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை  மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் சுகாதார சானிட்டரி நாப்கின் தயாரிக்கப்பட்டு தோழி என்ற திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் முதன் முதலாக கரூர் மாவட்டத்தில்  இந்த  விற்பனை மகாதானப்புரத்தில் நியாய விலை கடையில் இன்று துவக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட் 30 ரூபாய் விலையில்  நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இது வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை விட 25 சதவீதம் குறைவான விலை என்றும், தமிழக அரசின் முன்னோடி திட்டமான இது கரூர் மாவட்டத்தில் 21 நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.


மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுகாதாரமான முறையில் இருப்பதற்காக இந்த சுகாதார சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாவும், 21 கடைகளில் இந்த நாப்கினை வாங்கி உபயோகப்படுத்தும் பெண்கள் கூறும் கருத்துக்களை கேட்டு அதற்கேற்றவாறு இந்த நாப்கின் தரமும் மேம்படுத்தப்படும் என்றார். குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமில்லாமல் மற்ற பெண்கள் அனைவரும் நியாய விலை கடைகளில் இந்த சுகாதார சானிட்டரி நாப்கினை வாங்கிக்கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் கூறினார். பொது நியாயவிலை கடைகளில் விற்கப்படும்போது கிராமப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் இங்கு வாங்கி பயன்பெறலாம் என்ற அடிப்படையில், நாப்கினை பொது விநியோக கடைகளில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார். 


நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி ,பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை ,உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பெண்களுக்கு அத்தியாவசியமான நாப்கின் நியாய விலைக் கடைகளில் விற்பனைக்கு வருவது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க 


Flight Cancelled: சென்னை முதல் அந்தமான் வரை செல்லும் விமானம் ரத்து.. விமான நிலையத்தில் பயணிகள் வாக்குவாதம்..


Cheteshwar Pujara: தடுப்புச்சுவர் உடைக்கப்படுகிறதா? இந்திய அணியில் நீக்கப்பட்ட சோகம்.. துலீப் ட்ராபிக்கு தயாரான புஜாரா...!