இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், சிஐடியு மாவட்ட துணைத் தலைவரான தண்டபாணி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சி.ஐ.டி.யு 9வது மாவட்ட மாநாடு நேற்று துவங்கி இன்று வரை இரண்டு நாட்கள் கரூரில் நடைபெறுகிறது. இதற்காக கரூர் பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் அமைப்பின் கொடி கட்டப்பட்டிருந்தது.




இந்த நிலையில் கரூர் மாநகர பகுதிகளில் கட்டப்பட்டிருந்த சிஐடியு கொடிகள் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், சிஐடியு மாவட்ட துணைத் தலைவரான தண்டபாணி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.




இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் ஆய்வாளர் விதுன்குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 




இதுகுறித்து சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், மாநாடு நடத்துவதற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட மாநாடு நடைபெறும் போது நகரப்பகுதிகளில் கொடிகள் நடுவது வழக்கமாக உள்ளது. அமைப்பின் கொடியை நடுவதற்கு தனியாக இதுவரை அனுமதி பெற்றதில்லை.




இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும் என்று புதுமையான காரணம் ஒன்றை காட்டி கரூர் மாநகரில் கட்டப்பட்டிருந்த அமைப்பின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதற்கு எங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், கரூருக்கு புதிதாக வந்துள்ள காவல் ஆய்வாளர் இவ்வாறு தன்னிச்சையாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்படும். மேலும், இந்த சம்பவத்தின் எதிரொலியாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.