வலங்கைமான் மாரியம்மன் கோயில் தெப்பத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி நீரில் மூழ்கி பலியாகினர்.


பிரசித்தி பெற்ற வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பாடைகட்டி காவடி எடுத்தல் திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம். இந்த விழாக்களில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்து வருவது வழக்கம். இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது வழக்கமாகும். இந்த நிலையில் இந்த ஆண்டு பாடைகட்டி மாரியம்மன் கோயிலில் பாடைகட்டி காவடி எடுத்தல் திருவிழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்ற நிலையில் கடந்த மூன்று நாட்களாக பாடைகட்டி மாரியம்மன் கோயிலில் தெப்ப திருவிழா மிக உற்சாகமாக நடைபெற்றது. தெப்பத் திருவிழாவின் இறுதி நாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்ற நிலையில் தெப்பத்தை பிரிக்கும் பணியில் ஏழு ஊழியர்கள் நேற்று ஈடுபட்டு வந்தனர்.




திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வரதராஜன் பேட்டையில் அமைந்திருக்கும் பாடைக்கட்டி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. கொரோனா தொற்று குறைந்ததற்கு பின்னர் இந்த வருடம் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தெப்ப திருவிழாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வருடம் வழக்கம் போல ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று தெப்ப திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை தெப்பத்தை பிரிக்கும் பணியில் ஏழு தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். இதில் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் காவிரிக்கரை தெருவை சேர்ந்த சந்திரமோகன் என்பவரும் தெப்பம் கட்டுமானப் பணிகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 




இந்த நிலையில் வெப்பத்தை பிரித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் உணவு என்பதற்காக பணியை நிறுத்திவிட்டு சென்றிருந்தனர். அதே நேரத்தில் மற்றவர்கள் உணவருந்த சென்ற நிலையில் சந்திரமோகன் மட்டும் உணவருந்த வரவில்லை. அதனை அடுத்து அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் சந்திரமோகனை தேடி உள்ளனர். அப்பொழுது சந்திரமோகன் தெப்பக்குளத்தில் மூழ்கியுள்ளார் என தெரிந்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட வலங்கைமான் தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி சந்திரமோகனின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.  2 மணி நேரத்திற்கு பின்னர் சந்திரமோகனின்  உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் மற்றும்,  30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தும் வலங்கைமான் காவல்துறையின் அலட்சியப் போக்கே காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளர் சந்திரமோகன் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சக தொழிலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக தேர் மற்றும் தெப்பம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடந்து முடிந்த பின்னர் அதனை பிரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புடன் செயல்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை கோயில் நிர்வாகம் முன்கூட்டியே வழங்க வேண்டும் அப்படி செய்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நிகழாமல் தடுத்திருக்க முடியும் எனவும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.