கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டம் மன்றத்தில் நடந்தது. மாநகராட்சி மேயர் கவிதா தலைமை வகித்தார் துணை மேயர் சரவணன் ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மேயர் கொண்டு வந்த தீர்மான முன்மொழிவில் கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் பகுதியில் ரூ.66 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டிடம் முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் அடிக்கல் நாட்டப்பட்டு, பஸ் நிலைய கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பஸ் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பஸ் நிலையம் என்று பெயர் சூட்டுவது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.




133வது தீர்மானம் முன்மொழிவாக கொண்டுவரப்பட்ட, கரூர் பஸ் நிலைய தென் பகுதியில் உள்ள பழுதடைந்த கட்டிடமாக உள்ள 26 கடைகள் அவற்றின் மேற்பகுதியில் உள்ள தபால் அலுவலகம், கட்டண கழிப்பறை, அரசு போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு முன்பதிவறை, டெலிபோன் பூத் உள்ளிட்ட கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்துவது என்ற முன்மொழிவு வாசிக்கப்பட்டது. அதன் மீது பேசிய கவுன்சிலர்கள் நிவேதா, மேற்கண்ட தீர்மானம் முன்மொழிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மேற்கண்ட கட்டிடம் இடிந்து போய் உள்ளது. அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. கட்டிடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான் கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். கடைக்காரர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். கவுன்சிலர் நிவேதா, அங்குள்ள கடைக்காரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றார்.




ஆணையர், கட்டடம் இடிக்கப்பட்ட பின்னர் கடைக்காரர்களுக்கு தற்காலிகமாக கடை வைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என்றார். அதனை தொடர்ந்து அந்த தீர்மானம் நிறைவேறியது. மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசன், சக்திவேல், கவுன்சிலர்கள், பசுவை சக்திவேல், பாண்டியன், தண்டபாணி உட்பட பலர் தங்கள் பகுதியில் நடந்து வரும் பணிகள் சரியாக நடப்பதில்லை. செய்யப்படும் பணிகளும் பாதியுடன் நிற்கின்றன. எப்போது கேட்டாலும் உடன் சரி செய்யப்படும் என்ற பதில் தான் கிடைக்கிறதே தவிர, வேறு வேலை நடப்பதில்லை. பல வார்டுகளில் குடிநீர் பிரச்சனை பெரிதாக உள்ளது. சரியாக தண்ணீர் சப்ளை செய்வதில்லை. ஒவ்வொரு ஏரியாவிலும் வெவ்வேறு கால அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சுகாதாரப் பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.




கரூர் நகரில் பெருத்து வரும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். இன்றைய நிலையில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 7 ஆயிரம் நாய்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவற்றை கட்டுப்படுத்தாவிட்டால் இன்னும் சில மாதங்களில் அவை 20 ஆயிரமாக உயர்ந்துவிடும் என்று குறைகளை எடுத்துக் கூறினர். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்கப்படும். இன்று பார்க்கப்படும். ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும் என்று பதிலளித்தனர். திமுக கவுன்சிலர் வசுமதி, தனது வார்டு பகுதியில் அமைக்கப்படும் புதிய பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைத்ததற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி, மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதிமுக கவுன்சிலர் சுரேஷ் தனது வார்டில் பணிகள் சரிவர செய்யவில்லை என்று கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 153 தீர்மானம் முன்மொழிவுகளும் ஏகமனதாக நிறைவேறின.