சென்னை மற்றும் பாண்டிச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரையோரம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பிரதான தொழில் படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து அதனை விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். தமிழக அரசு மீனவர்கள் நலன் கருதி டீசலினால் இயக்கப்படும் பைபர் மற்றும் நாட்டு படகுகள் பயன்படுத்தும் மீனவர்களுக்கு தமிழக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மானிய விலையில் டீசல் வழங்க முடிவு செய்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. மீனவர்கள் மானிய விலையில் டீசலை பெரும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஆங்காங்கே இதற்கென டீசல் பங்குகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், செய்யூர் அடுத்த கிழக்குக் கடற்கரை சாலை கோட்டைக்காடு பகுதியில் டீசல் பங்க் கடந்த 2011ம் ஆண்டு அமைக்கப்பட்டது. கொட்டிவாக்கம் குப்பம் முதல் ஆலம்பரை குப்பம் வரையில் உள்ள 42 மீனவ கிராம மக்களில் சுமார் 2 ஆயிரம் பைபர் மற்றும் நாட்டு படகுகள் வைத்துள்ள மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மானிய விலை டீசல் வழங்கப்பட்டது. காலை 10 மணி முதல் 5 மணி வரையில் ஏங்கும் இந்த மானிய விலை டீசல் பங்கில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தினமும் 100 லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. 100 லிட்டர் டீசலை மானியமாக பெற வேண்டுமென்றால் அரசு பல்வேறு விதிமுறைகளை வைத்திருந்தது.
இந்நிலையில் சிலர் 300 முதல் 400 பயனாளிகள் பெற வேண்டிய பல்லாயிரக்கணக்கான லிட்டர் டீசலை ஒரே நபர் பேரல்களில் பிடித்து வெளியிடங்கள் கொண்டு சென்றுகள்ள சந்தையில் விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோட்டைக்காடு பெட்ரோல் பங்கில் இருந்து பேரல் பேரலாக டீசல் பிடித்து செல்லும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தனி நபர்கள் இதுபோன்று அரசு மீனவர்களாக கொடுக்கப்படும் மானிய டீசலை முறைகேடான முறையில், இது போல விற்பனை செய்வதை குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து சட்டவிரோத செயல் ஈடுபவர்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.