மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு,  13 ஆயிரத்து, 516 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 14 ஆயிரத்து, 779 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 13 ஆயிரத்து, 349 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,420 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 466 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 359 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 374 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 88.32 அடியாக இருந்தது.




திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 33 கனஅடியாக இருந்தது.


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 63 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.81 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.




கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை


கரூர் மாவட்டத்தில் நள்ளிரவில் விடிய விடிய மழை பெய்தது. இதனால், கரூரில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் தேங்கிய மழை நீரை கடந்து செல்ல முடியாமல் மாணவியர்கள் கடும் அவதிப்பட்டனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு தொடங்கிய மழை, பெறும்பாலான பகுதிகளில் விடிய விடிய பெய்தது. 




கரூர் மாவட்டத்தில் கரூர் டவுன், வெங்கமேடு, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, வெள்ளியணை, நொய்யல், வாங்கல், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் தண்ணீர் தேங்கி நின்றது.


இதனால், வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவியர்கள் மழை நீரை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். காலை 8:00 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம், மயிலம்பட்டி, 18, கரூர், 17, பால விடுதி, 12.4, கடவூர் 11.4, க.பரமத்தி, பஞ்சப்பட்டி, 7.2, குளித்தலை, 7, தோகைமலை, 5, கிருஷ்ணராயபுரம், 4, மாயனூர், 1 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 7.58 மி.மீ., மழை பதிவானது.