தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை நியமனம் செய்து தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேமுதிகவின் பொருளாளராக 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த், தற்போது பொதுச் செயலாளராகியுள்ளார். 2011 தேர்தலில் தேமுதிகவுக்காக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, 2018ல் பொருளாளர் ஆனார். கட்சியின் நிறுவன தலைவராக மட்டும் விஜயகாந்த் தொடர்கிறார்.
2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. அப்போது, எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தார். அதன்பிறகு அவரது பேச்சு, நடவடிக்கை, செயல் என அனைத்தும் மாற தொடங்கியது. திமுக, அதிமுகவிற்கு தமிழ்நாட்டில் மூன்றாவது அணியாக உருவெடுத்த தேமுதிக கட்சி, அதன்பிறகு மெல்ல மெல்ல காணாமல் போக தொடங்கியது.
தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரால் சரிவர பேசமுடியாத நிலை ஏற்பட்டதில் இருந்து அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமாக இருந்த பிரேமலதாவே கட்சியை நடத்தி வந்தார். 2016 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்தின் முகத்தை காட்டி, அவர் கையசைப்பதை மட்டுமே வைத்து வாக்கு சேகரித்து வந்தார் பிரேமலதா. கொரோனா கால கட்டத்திற்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது முகத் தோற்றமும் மாறத் தொடங்கியது. அதனால், பிறந்தநாளாக இருந்தாலும் திருமண நாளாக இருந்தாலும் விஜயகாந்துடன் அவர் குடும்பத்தினர் புகைப்படம் எடுக்கும்போதெல்லாம் அவருக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டு எடுத்து கொண்டிருந்தனர்.
தேமுதிக-வில் புதிய மாற்றம்:
இப்படிப்பட்ட சூழலில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இண்டியா கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேமுதிக-வை புறக்கணித்துள்ள நிலையில், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது, இதனால், கட்சி கட்டமைப்பில் விரைவில் மாற்றங்கள் நிகழும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பாணியை பின்பற்றும் பிரேமலதா ?
திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கட்சி பணிகளை கவனிக்க முடியாமல்போனபோது, அப்போது செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டு, கட்சி பணிகளை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார். அதே பாணியை பின்தொடர்ந்து கட்சியின் பொருளாளராக இருந்த பிரேமலதாவை தேமுதிக-வின் பொதுச்செயலாளராக விஜயகாந்த் நியமித்துள்ளார். பொது செயலாளர் என்று அறிவித்த உடன் , மேடையில் விஜயகாந்த் காலில் விழுந்து பிரேமலதா வணங்கினார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் உள்ளது என்று தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் திட்டம்:
பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டவுடன், தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ‘வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கழக தொண்டர்கள் அனைவரும் ஒருமையுடனும், முழுவேகத்துடனும் பணியாற்றிட இந்த பொதுக்குழு உறுதிகொள்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் யுத்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தேமுதிக பொதுக்குழு இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.