அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த தனது இளைய மகனுக்கு நிவாரணம் வேண்டும். இல்லையெனில்  குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.


 


 




 


வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான்தோன்றி மலைப் பகுதியில் உள்ள கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் உள்ளிட்ட அரசு அதிகாரியிடம் வழங்கி வந்தனர்.


 


 




 


இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பாலம்மபுரம் பகுதியைச் சார்ந்த மெரினா மாரியப்பன் தம்பதியினருக்கு  இரண்டு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் இளைய மகன் நந்தகுமார் கடந்த (26.12.2023) அன்று பசுபதிபாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டார். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் நிதி வேண்டி நான்கு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எங்களை அங்கே செல்லுங்கள் இங்கே செல்லுங்கள் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்கின்றனர்.


 


 




 


எனது கணவர் மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். தினக்கூலி வேலைக்காக டெக்ஸ்டைலில் நானும் எனது மூத்த மகனும் வேலை செய்து வருகின்றோம். இருப்பினும் கடன்கள் அதிகமாக உள்ள நிலையில் கட்ட முடியாத சூழ்நிலையில் மிகவும் தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இறந்த எங்களின் இளைய மகனுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையெனில் எங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.


 


 




 


மேலும் கரூர் மாவட்டத்தில் இன்று நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள், இயக்கங்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட என பல தங்களது பிரச்சனைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரியிடம் கொடுத்து அதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் அந்த மனு மீது விசாரணை நடத்தி வருகின்றனர். நாள்தோறும் திங்கட்கிழமைகளில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக 15 நாட்களுக்குள் மனு மீது உரிய பதிலளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.


 




 


மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வட்டாட்சியர் துணை ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர், காவல் துறையினர், மின்சார வாரியம், மருத்துவம் துறை, வீட்டு வசதி வாரிய துறை, மாற்றுத்திறனாளி நல அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சோதனை செய்து பிறகு உள்ளே அனுமதித்தனர்.