கரூர் அருகே செயல்படும் தனியார் ஜெம்ஸ் பாலிஸ் செய்யும் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.


கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குட்பட்ட கல்லுமடை காலனி அருகே தனியார் ஜெம்ஸ் பாலிஸ் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திற்கு பிளாஸ்ட் பைப் தரைக்கு மேலே அமைத்து கழிவு நீரை கொண்டு சென்று அய்யம்பாளையம் அருகே தண்ணீர் ஓடையில் வெளியேற்றி வருகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றி வருகின்றனர். 


 


 




ரசாயனம் கலந்த அந்த தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் ஓடை முழுவதும் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இந்த தண்ணீர் தொடர்ந்து தேங்கி நின்றால் அந்த கிராமத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் குடிநீர் கிணறுகளுக்குள் இறங்கி அவை மாசுபட்டு விட்டது. இதனால் இப்பகுதி விவசாய நிலங்கள், கிராம மக்கள், அரசுப் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகத்திடமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 


 


 




இந்த நிறுவனம் ஜெம்ஸ் பாலிஸ் செய்வதாக அரசுக்கு தெரிவித்து விட்டும், கிணறு வெட்டுவதாக உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று விலையுயர்ந்த ரத்தின கற்களை வெட்டி எடுத்து வெளி சந்தையில் விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பதுடன், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.


 




பொதுவாக அப்பகுதியில் இயற்கையாகவே விலையுயர்ந்த பல்வேறு வண்ண ரத்தின கற்கள் கிடைக்கும் பகுதி என்பதால், கிணறு வெட்ட 60 அடி ஆழம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக கிணறு வெட்டுவதாகவும், அதில் வரும் தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் லட்ச கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வருவதாகவும், 4 பக்கமும் 9 அடி உயரத்திற்கு தகரத்தில் சுற்றுச் சுவர் அமைத்து கிணறு வெட்ட வேண்டிய அவசியம் என்ன, சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 


 


 




இது தொடர்பாக அந்நிறுவன பணியாளர்கள் மூலம் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அரசின் அனுமதியுடன் தான் தொழில் செய்து வருவதாகவும், வெளி மாநிலத்தில் இருப்பதால், வரும் புதன் கிழமை உங்களை அழைத்துச் சென்று நிறுவனத்தை காட்டுவதாக தெரிவித்தார். தனக்கு வேண்டாதவர்கள் இது போன்ற பொய்யான தகவல்களை ஆட்சியரிடம் மனுக்களாக கொடுப்பதாக தெரிவித்தார்.