கரூர் புத்தக திருவிழாவின் அடையாளச் சின்னம் இலட்சினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வெளியிட்டார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தக திருவிழாவையொட்டி, தேவாங்கு விலங்கினத்தை மையப்படுத்தி “நூலன் மற்றும் நூலி” என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட அடையாள சின்னமான இலட்சினை (MASCOT) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வெளியிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கரூர் புத்தக திருவிழாவையொட்டி, கடவூர் காடுகளில் அதிகளவு வசிக்கும் தேவாங்கு விலங்கினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வினத்தை பாதுகாக்க கடவூரில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளின் சம உரிமைகளை அடையாளப்படுத்தும் வகையிலும் நூலனும், நூலியும் அடையாள சின்னமான இலட்சினை (MASCOT) வடிவமைக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022 (19.08.2022 முதல் 29.08..2022 வரை) கரூர் திருமாநிலையூரில் 19.08.2022 தேதி 100 அரங்குகளுடன் கூடிய மாபெரும் புத்தக திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தலைமையேற்று துவக்கி வைக்க உள்ளார்கள். இந்த புத்தக திருவிழாவில் 100 புத்தக அரங்குகள், தொல்லியல் அருங்காட்சியகம், கோளரங்கம், குறும்பட திரையரங்கம், உணவரங்கம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட அரங்குகள் இடம் பெற உள்ளன. தினந்தோறும் 4000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை புத்தக திருவிழாவிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போதைப் பழக்கத்திற்கெதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதை தொடர்ந்து சிந்தனை நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.
துவக்க நாள் விழாவினை தொடர்ந்து
2-ஆம் நாள் நிகழ்ச்சியாக (20.08.2022) பத்ம ஸ்ரீ முனைவர் சாலமன் பாப்பையா மற்றும் குழுவினரின் "மனிதனின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது படிப்பறிவே பட்டறிவே" என்ற தலைப்பில் பட்டிமன்றம்,
3-ஆம் நாள் நிகழ்ச்சியாக (21.08.2022) செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி குழுவினரின் "மண்மனம் - மக்களிசை" என்ற கலை நிகழ்ச்சிகளும்,
4-ஆம் நாள் நிகழ்ச்சியாக (22.08.2022) மருத்துவர் சிவராமனின் "நலம் - இனி நம் முதல் தேடல்"என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் மல்லூரின் "அறிவே துணை" என்ற தலைப்பில் சிறப்புரையும்,
5-ஆம் நாள் நிகழ்ச்சியாக (23.08.2022) மோகன சுந்தரம் "தனமும், இன்பமும் வேண்டும்" என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் நீயா நானா கோபிநாத்தின் "எது புரிந்தால் வாழ்க்கை புரியும்" என்ற தலைப்பில் சிறப்புரையும்,
6-ஆம் நாள் நிகழ்ச்சியாக (24.08.2022) பாரதி கிருஷ்ணகுமாரின் "அறம் செய விரும்பு" என்ற தலைப்பில் சிறப்புரையும்,
7-ஆம் நாள் நிகழ்ச்சியாக (25.08.2022) சுந்தர ஆவுடையப்பனின் தண்டோரா" என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் சிந்தனை கவிஞர் கவிதாசனின் "வெல்வதற்கே வாழ்க்கை" என்ற தலைப்பில் சிறப்புரையும்,
8-ஆம் நாள் நிகழ்ச்சியாக (26.08.2022) பாரதிபாஸ்கரின் கதை கேளு... கதை கேளு... என்ற தலைப்பில் சிறப்புரையும்,
9-ஆம் நாள் நிகழ்ச்சியாக (27.08.2022) கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் குழுவினர் "மகிழ்வும், நிம்மதியும் தருவது கிராம வாழ்க்கையா நகர வாழ்க்கையா" என்ற தலைப்பில் பட்டிமன்றமும்,
10-ஆம் நாள் நிகழ்ச்சியாக (28.08.2022) முனைவர் ஜெயசீலன் இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை " நல்ல காகிதம் செய்வோம் "என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் சுகிசிவம் " எங்கோ பெய்த மழை " என்ற தலைப்பில் சிறப்புரையும்,
11-ஆம் நாள் நிகழ்ச்சியாக (29.08.2022) பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் மற்றும் குழுவினர் "சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்" என்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இந்த புத்தக கண்காட்சி பொதுமக்கள் மாணவ, மாணவியர்களிடையே வாசிப்பு திறனை உருவாக்கி அறிவினை மேம்படுத்தும் விதமாக அமையவுள்ளது. அனுமதி இலவசம், அனைவரும் வாரீர், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், புத்தகப்பிரியர்கள், வாசக வட்டத்தை சேர்ந்தவர்கள் இப்புத்தகக் கண்காட்சியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்