சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் நேற்று நடந்தது. கரூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் நெல்லை சிவா தலைமை வகித்தார். கலெக்டர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசுகையில், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மலேரியா நோயை தடுப்பதற்கு வீடுகளை சுற்றி தேவையின்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதியோர்கள் அனைவரும் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் தேவையான மருந்து, மாத்திரைகளை பெற்று பயன்பெற வேண்டும். தனியார் துறையில் வேலை வாய்ப்பு வேண்டுபவர்கள் பாலம் திட்டத்தின் கீழ் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு எதிராக செயல்பட முன்வர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு செயல்பாடு ஏற்பட்டாலும் வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கலாம். பள்ளி கட்டடம், அரசு கட்டிடங்களை சீரமைத்தல், சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் விநியோகம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்துள்ளனர். அவற்றுக்கு உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக, கிராம சபையில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கிராம சபை கூட்டத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து, சுகாதாரத்துறை கண்காட்சிகள், டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, மருத்துவ முகாம், மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு வில்லுப்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் கல்வியை தவிர்த்து உயர் கல்வி படிக்க வைக்க வேண்டும். கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் பிரசவ காலத்தில் தாய் - சேய் மரணத்தை தடுப்பதற்கு சிறு வயது திருமணங்களை தடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு செயல்பாடு ஏற்பட்டாலும் 89033 31098 என்ற whatsapp எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.
இதேபோல் வேடமங்கலம், கோம்பபாளையம், திருக்காடுதுறை, புகலூர், கடம்பங்குறிச்சி, மன்மங்கலம், காதப்பாரை ஆகிய ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவர்கள் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. தோகமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சனம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அன்புமணி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வாணி ஈஸ்வரி, ஆர்டிஓ ரூபினா, மாவட்ட வளங்கள் அலுவலர் தட்சிணாமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வீராசாமி, குழந்தைகள் நல அலுவலர் நாகலட்சுமி, தாசில்தார் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்