கரூர் புத்தகத் திருவிழாவில் போதிய இருக்கை வசதி இல்லாததால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து பட்டிமன்றத்தை பார்த்தனர்.


 




கரூர் தனியார் மண்டபத்தில் நடக்கும் புத்தக கண்காட்சி கடந்த 6-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. கரூர் மாவட்ட நிர்வாகம், பபாசியுடன் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு துறைகள் சார்ந்த லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றம் நிகழ்த்துகின்றனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் கண்டு களித்தனர்.


 




 


 


விடுமுறை நாட்கள் என்பதால் சாலமன் பாப்பையாவின் சிறப்பு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது. 'இன்றைய வாழ்க்கையின் பயணம், நிதியை தேடவா! நிம்மதியை தேடவா! என்ற தலைப்பில் பட்டிமன்ற குழுவினர் பேசி வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் திரளான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பட்டிமன்றத்தை காண வந்தனர். புத்தகத் திருவிழாவில் உள்ள மண்டபங்களில் உள்ள இருக்கைகள் நிரம்பியது.


 




இந்த நிலையில் பட்டிமன்றத்தை பார்க்க வந்த பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எல்.இ.டி திரையில் பட்டிமன்றத்தை கண்டு ரசிப்பதற்காக தரையில் அமர்ந்து நிகழ்ச்சியை காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஒரு சிலர் நின்று கொண்டு பார்த்தனர். 10 நாட்கள் நடைபெறும் பட்டிமன்றத்தில் தமிழகத்தின் பிரபலமான சொற்பொழிவாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்த பபாசி நிர்வாகம் அதனை கண்டு களிக்க போதிய இருக்கை வசதி ஏற்பாடு செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் தரையில் அமர்ந்தும், நின்று கொண்டும் நிகழ்ச்சியை காணும் அவல நிலை ஏற்பட்டது.