ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சதீஸ்தவான் விண்வெளி மையம் மற்றும் ஜமால்முகமது கல்லூரி இணைந்து உலக விண்வெளி வாரத்தையொட்டி விண்வெளி ஆராய்ச்சி பற்றிய கண்காட்சி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா மற்றும் ஓவியம் வரைதல் போட்டிகளை கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 3 நாட்கள் நடத்தினார்கள். இதன் நிறைவு விழா கல்லூரி அரங்கத்தில் நேற்று நடந்தது. இஸ்ரோ துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் காஜாநஜிமுதீன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கலந்து கொண்டு பேசுகையில், 'இதுபோன்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சிகள் யாராவது ஒரு மாணவரை விஞ்ஞானியாக உருவாக்கக்கூடும். மற்றவர்கள் பேச்சை கேட்பதைவிட நம் மனது என்ன சொல்கிறதோ, அதன்படி தான் செயல்பட வேண்டும்.
ஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்களில் தற்பெருமை பேசிக்கொண்டு நிறைய நேரத்தை வீணடித்து வருகிறார்கள். அவ்வாறு சமூக ஊடகங்களில் நேரத்தை வீணடிக்கக்கூடாது. எந்த வேலையையும் பிரியத்துடன் செய்தால் நம்மால் அதில் சாதிக்க முடியும். நாம் நாட்டுப்பற்றை தனியாக காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. அவரவர் பார்க்கிற வேலையை சேவை மனப்பான்மையுடன் சரியாக செய்தாலே அது தான் நாட்டுப்பற்று' என்று பேசினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சதீஸ்தவான் விண்வெளி மைய துணை இயக்குனர் செந்தில்குமார் பேசும்போது, 'சந்திரயான்-3 வெற்றியை உலகில் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள அனைத்து நாடுகளும் கொண்டாடி வருகிறார்கள். இஸ்ரோவில் என்ன பணிகள் நடக்கின்றன என எங்களுக்கு தெரியும். எங்களுடன் தொடர்பில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தெரியும். அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 8 இடங்களில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் 150 விஞ்ஞானிகள் கலந்து கொள்கிறார்கள். சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு, விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது சுலபமாகிவிட்டது. தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம் ஆர்பிட்டரில் நிலை நிறுத்தப்பட்டு ஜனவரி மாதத்தில் இருந்து தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்தபடியாக நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்ககி வரும் செயற்கை கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது' என்று பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இதில் பாய்லர் ஆலை செயல் இயக்குனர் ராமநாதன் நிறைவுரையாற்றினார். கல்லூரியின் பொருளாளர் ஜமால்முகமது, முதல்வர் இஸ்மாயில் முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சதீஸ்தவான் விண்வெளி மைய பொது மேலாளர் ஸ்ரீகுமார் வரவேற்றார். முடிவில் மேலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.3 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை மாணவ-மாணவிகள் உள்பட 6,500 பேர் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.