கரூர் மாவட்டத்தில் (21.8.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 34 ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,611 மையங்களில் நடைபெற உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். மேலும் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று முற்றிலும் குறைந்து இருந்த நிலையில், தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது சுகாதார துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளும், கோவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் RTPCR பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.




கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால், பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்கவும் மீண்டும் பரவி வரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கொரோனா தடுப்பூசி மருந்தே கொரோனா பெருந்தொற்றிற்கு எதிரான முதன்மை கேடயம். இதனை கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி அவரவர் தம் பகுதியிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் (21.8.2022) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதர நாட்களிலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 12 - 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் (corbevax vaccine) மற்றும் 15 - 18 வயது உடையவர்கள் (covaxin) போடப்பட்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால், அவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால், இவ்வையதுடையவர்கள் இத்த தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி, அரசு நிலையங்களிலேயே 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.




18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இரண்டாம் தவணை தடுப்பூசி போட்ட தேதியிலிருந்து 9 மாத கால அவகாசத்தில் இருந்து தற்போது ஆறு மாத கால அவகாசமாக குறைக்கப்பட்டுள்ளதால், இவர்களும் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதே போல் முதல் தவணை தடுப்பூசி போட்டு இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலுவையில் உள்ளவர்கள் மொத்தம் 60,902 நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடைய நபர்கள் 5,43,174 கரூர் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களும் இம்முகாமை பயன்படுத்தி, தங்களது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.




எனவே இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் (21.8.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34 ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி கொரோனா  பெரும் தொற்று பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு, அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்கள்.