சென்னைவாசி என்று மார்தட்டிக் கொள்ளும் மக்களை எண்ணிவிடலாம். தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இருந்து வந்தவர்களும், இந்தியாவின் எல்லா மாநிலத்தில் இருந்து வந்தவர்களும் வசிக்கும் ஊர் தான் சென்னை. அதனால் தான் எல்லோரும் இது எங்க ஊரு மெட்ராஸு என்று கொண்டாடுகின்றனர். ஒரு ரூபாய் வைத்துக் கொண்டும் நாளை கடத்துவார்கள். ஒரு கோடியையும் ஒரே நாளில் செலவழிப்பவர்களும் இருப்பார்கள். இங்குதான் பிளாட்ஃபாரத்தில் சினிமா வாய்ப்பு தேடி படுத்திருப்பவர் ஒரே நாளில் பிளாக்பஸ்டர் நடிகராகவோ இன்னும் பிற கலைஞராகவோ ஆக முடியும்.
சமீப காலமாக சென்னையின் பெருமையைக் கொண்டாட மெட்ராஸ் டே கொண்டாடப்படுகிறது. இதனை முன்னெடுத்தது 'மெட்ராஸ் டே' குழுவினர், தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தின் ஒரு சிறுபகுதியை, அன்றைய விஜயநகர நாயக்கர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி முறைப்படி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம்தேதி வாங்கியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதால், அந்த தினத்தை சென்னை தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டும் ஆகஸ்ட் 22 ஐ எதிர்பார்த்து பல்வேறு கொண்டாட்டங்கள் தயாராகி வருகின்றன. நம்ம சென்னை, வணக்கம் சென்னை என ஹேஷ்டேகுகளுக்கும் பஞ்சமிருக்காது.
நாம் இன்று போற்றும் சிங்காரச் சென்னை ஒரு காலத்தில் சிறிய கிராமம். பசுமையான ஓர் அழகிய கிராமம். கூவம் அழகிய நதி. கிழக்கிந்திய கம்பெனி சென்னையை வாங்கியபிறகுதான், கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற ஆரம்பித்தது. ஏராளமான நிறுவனங்கள், ஷாப்பிங் இடங்கள் என மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.
1688-ம் ஆண்டு, அன்றிருந்த மதராஸ் நகரை முதல் மாநகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் அறிவித்தார். சென்னைதான் நாட்டின் முதல் மாநகராட்சி. அப்படிப்பட்ட சென்னையின் முக்கியஸ்தர்கள் பலர் அன்று முதல் இன்று வரை இருந்தாலும், அதில் சில முக்கியமான ஆளுமைகள் குறித்து தற்போது பார்ப்போம்...
தாமஸ் மன்றோ:
மெட்ராஸ் என்றவுடன் நம் கண் முன்னே பல சிலைகள் வந்துபோகும். அதில் மறக்க முடியாதது தாமஸ் மன்றோ சிலை. சென்னை தீவுத்திடலைக் கடக்கையில் கம்பீரமாக குதிரையில் அமர்ந்திருக்கும் மன்றோவைப் பாக்காமல் செல்ல முடியாது. இந்தியா சுதந்திரமடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகும் மன்றோவைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். ஸ்காட்லாந்தில் பிறந்த ஒருவரை மறைந்து 194 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவுகூறுமளவுக்கு அப்படி அவர் என்ன செய்திருக்கிறார் என்று யோசிக்கிறீர்களா?
பிரிட்டிஷ் ராணுவத்தில் படைவீரனாக வந்து சென்னையின் கவர்னராக உயர்ந்தவர் மன்றோ. ஆங்கிலேயர்கள் அடிமையாக்கும் எண்ணம் மட்டுமே கொண்டிருந்த காலகட்டத்தில் மன்றோ ஒரு மாணிக்கம். எளிய மக்களின் துயரங்களை உணர்ந்து அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தவர். நிர்வாகம், கல்வி, காவல்துறை எனப் பல்வேறு துறைகளில் அவர் செய்த சீர்திருத்தங்கள் இன்றுவரை இந்திய நிர்வாகத்தில் நடைமுறையாக இருக்கிறது. அதுதான் அவர் கம்பீரமாக நிற்கக் காரணம்.
எம்சி ராஜா:
ராவ் பகதூர் எம் சி. ராஜா என அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியும், சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார். பி. ஆர். அம்பேத்கருக்கு முன்பே அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். இளம் வயதிலேயே அரசியலுக்குள் நுழைந்த ராஜா, செங்கல்பட்டு மாவட்ட வாரியத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916ல் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளரானார். தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். அதன் உறுப்பினராகவும் இருந்தார். நவம்பர் 1920ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றார். சட்டசபைக்கு நீதிக்கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியல் சமூக உறுப்பினர் ராஜாதான். தலித் விடுதலைக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் சென்னையில் பல இடங்களில் இரவுப் பள்ளிகளையும், விடுதிகளையும் தொடங்கினார்.
ராமநாதன் செட்டியார்:
ராமசாமி ராமநாதன் செட்டியார் தொழிலதிபரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றினார். ராமநாதன் செட்டியார் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் திருவண்ணாமலை திவான் பகதூர் ராமசாமி செட்டியாருக்கு பிறந்தார். சென்னையில் பிறந்த அவரின் மூத்த சகோதரா் அண்ணாமலை செட்டியார் ஆவாா். ராமநாதன் செட்டியார் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தாா். அவர் 1948 முதல் 1952 வரை சென்னை மாநகரில் ஒரு அவை உறுப்பினராக பணியாற்றினார். 1950 இல், ராமநாத செட்டியார் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வருடம் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் இந்திய பாராளுமன்றத்திற்கு ராமநாதன் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் முதல் இயக்குநராக ராமநாதன் செட்டியார் இருந்தார்.
ஓமந்தூரார்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதி. சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், ஒமந்தூராரின் மனம் முழுமையாக ஆன்மீகத்தின் பக்கம் சென்றது. அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார்.
அம்புஜம்மாள்:
அம்புஜம்மாள், 1898 இல், ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தார். ஒரு திறமையான மொழியியலாளர். எஸ். தேசாச்சாரி என்ற வழக்கறிஞரை, திருமணம் செய்து கொண்டார். அம்புஜம்மாள் ஆசிரியராக தகுதி பெற்று, ‘சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளி’யில், பகுதி நேரமாக கற்பித்தார். 1929 முதல் 1936 வரை, சாரதா மகளிர் சங்கத்தின் குழு உறுப்பினராக இருந்தார். சகோதரி சுப்பலட்சுமியுடன் மிக நெருக்கமாக வேலை செய்தார். 1929 ஆம் ஆண்டில், சென்னை மகளிர் சுதேசி லீக்கின் பொருளாளரானார். இந்த லீக், காங்கிரசின் அரசியல் சாராத பிரிவாக இருந்தது, காந்திஜியின் சமூக மற்றும் பொருளாதார திட்டங்களை செயல் படுத்தியது. 1920களில், மெட்ராஸுக்கு வந்த போது, காந்திஜியை சந்தித்ததில் இருந்தே, அம்புஜம்மாள் அவரைப் பின்பற்றினார்.
வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தை பிரபலபடுத்த, அவருடன் தமிழ்நாட்டில், 1956 இல் சுற்றுப் பயணம் செய்தார், அம்புஜம்மாள். கிராம தன்னிறைவு மாதிரியை நம்பினார். அதனை பரிந்துரைத்த படி, 1930ல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப் பட்டார். 1957 முதல் 1962 வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், 1957 முதல் 1964 வரை மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.