கார்த்திகை திருநாளில் அனைவரின் வீடுகளில் 27 விளக்குகள் ஏற்றி வழிபாட்டில் அனைத்துச் செல்வங்களோடு முப்பெரும் தேவிகளும் வீட்டிற்கு வருவார்கள் என்பது ஐதீகம்.


கார்த்திகை மாதம் என்றாலே தீபங்கள் தான் நம் அனைவருக்கும் நினைவிற்கு வரும். வீடுகளில் விளக்குகளை ஏற்றி தெய்வங்களை வழிபடும் இந்நாளைக்கொண்டாடுவதற்கு சில வழிமுறைகளும் உள்ளன. கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழ் மக்கள் தமது வீடுகளில் மற்றும் கோவில்களில் பிரகாசமாக தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடக்கூடிய தீப திருநாள் தான் கார்த்திகை தீபமாகும்.





ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகளில் பெண்கள் விளக்கேற்ற தொடங்கிவிடுவார்கள். சில வீடுகளில் கார்த்திகை மாதம் முழுவதும் தீப ஒளியாகத் தெரியும். இதனால் நம் இல்லங்களில் மகாலெட்சுமி குடியேறுவார் என்பது மக்களின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த இந்த தீப திருநாள் இன்று மாலை வெகு விமர்சியாக அனைத்து வீடுகளிலும் கொண்டாடப்படவுள்ளது. இந்நாளில் 27 விளக்குகள் ஏற்றினால் சகல செல்வங்களும் கிடைக்கும் என மக்களால் நம்பப்படுகிறது. மேலும் பரணி நட்சத்திரம் உள்ளதால் திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றிய பின்னர்  மாலை 5.30 மணி மேல் 6 மணிக்குள் வீடுகளில் தீபங்கள் ஏற்றலாம் என கூறப்படுகிறது.


கார்த்திகையில் விரதம் இருந்து இன்று மாலை ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகளை ஏற்றும் போது பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் எனவும், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகளின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. எனவே இன்றைய கார்ததிகை தீப திருநாளில் அனைவரும் வீடுகளை சுத்தப்படுத்துவதோடு மகாலெட்சுமியை வரவேற்க தயாராக உள்ளார்கள்.  மேலும் இந்நாளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றினால் கூடுதல் சிறப்பு. இதற்காக புதிய விளக்குகள் வாங்கத் தேவையில்லை எனவும் பழைய விளக்குகளை நன்றாக சுத்தப்படுத்தி ஏற்றினால் போதுமானதாகும்.


வீடுகளில் எங்கெல்லாம் விளக்குகளை ஏற்ற வேண்டும்?:


 தலைவாசலில் புதிய அகல் விளக்குகள்  அல்லது குத்துவிளக்குகள் கொண்டு தீபம் ஏற்றலாம். முன்னதாக அழகான கோலமிட்டுக்கொள்ள வேண்டும்.





சமையல் அறைகளிலும் கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.


உங்களது வீடுகளில் துளசி செடி நெல்லி, மாதுளை இருந்தால் அதில் நிச்சயம் விளக்குகளை ஏற்ற மறந்துவிடாதீர்கள். இவையெல்லாம் மகாலெட்சுமியின் அம்சங்களாகப் பார்க்கப்படுவதால் இச்செடிகளில் அனைத்தும் விளக்குகளை வைத்து வழிபட்டால், மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கின்றது.  .


இதேப்போன்று முடிந்தால் மாடிப்படிக்கட்டுகள் மற்றும் வீடு முழுவதும் விளக்குகள் போடும் போது நமக்கு பாசிடிவ் எனர்ஜி இதன் மூலம் பெறப்படுகிறது. பார்ப்பதற்கும் அழகாகவும் தெரியும்.





இன்றைக்கு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திருவண்ணாமலை தீபம் கோவியின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையால் மலையில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படவுள்ளது. கொரோனா காலம் என்பதால் இங்கு கிரிவலம் சுற்றுவதற்கும்,பொதுமக்கள் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்தப்போதும் இதனை வீடுகளில் இருந்தே காண்பதற்கு வசதியாக தொலைக்காட்சி, யூடியூப், கோவில் இணைய தளம், அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.