வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக்கொண்டிருந்தது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை  அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதன்படி, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று காலை கரையை கடந்தது.


அதேசமயத்தில், தமிழ்நாட்டில் இன்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே நேற்று அறிவித்திருந்தது. இதன்காரணமாக, ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை மாவட்டத்திலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




அதேபோல, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சேலம், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


அதேசமயத்தில் கடலூர், செங்கல்பட்டு மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் நேற்று கனமழை கொட்டித்தீர்த்ததால் அங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.




காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ள நிலையில் இன்று  திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும் நாளை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண