மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா விவசாயிகள் நாட்டின் தலைநகரான டெல்லியின் எல்லையில் கடந்த ஓராண்டுகளாக இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்தனர்.


அவர்களின் போராட்டத்தின் பலனாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பால் விவசாயிகளின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் :






மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!





உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!


ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் :


மத்திய அரசின் முடிவு விவசாயிகளின் கோரிக்கையை  ஏற்றுக்கொண்டதாக அர்த்தமில்லை. மத்திய அரசு தனது அடிப்படை கொள்கையை மாற்றிக்கொண்டதாகவும் அர்த்தமில்லை. உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பயம் காரணமாகவே மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளது.


வைகோ, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் :


மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்பதை உணர்ந்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.


கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்:


டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. பிரதமரின் இந்த அறிவிப்பு தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்கதாகும்.


திருமாவளவன் எம்.பி., வி.சி.க. தலைவர்:


மத்திய அரசு காலம் கடந்து முடிவு எடுத்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. நான்கு மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் ஆதாய நோக்கில் அவர்கள இந்த முடிவை எடுத்துள்ளனர்.


செம்மலை, முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க.:


விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


ஜி.கே.வாசன், த.மா.க. தலைவர்:


விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசைப் பொறுத்தவரையில் விவசாயிகள் நலன்சார்ந்த அரசு, விவசாயிகளின் நலனுக்காக வருங்காலங்களில் பாடுபட வேண்டும் என்ற காரணத்தினால் உண்மை நிலையை உணர்ந்து பிரதமர் இன்று மூன்று சட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளார். இது விவசாயிகளுக்கு நல்ல செய்தி.  ஆனால், விவசாயிகள் நலன் கருதியே விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.


வானிதி சீனிவாசன், பா.ஜ.க. எம்.எல்.ஏ.:


இன்றைய சூழலை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் எந்த தீர்ப்புக்கும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. ஏதாவது ஒரு தருணத்தில் இதை கவனிக்க வேண்டும் என்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர்:


விவசாயிகளின் நீண்டகால பிரச்சினையை தீர்க்கவே பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை கொண்டுவந்தார். வேளாண் சட்டங்கள் தவறு என்று கூறி அதனை திரும்பப் பெறவில்லை. போராடும் விவசாயிகளின் நலன் கருதிலே வாபஸ் பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே போராட்டத்தின் பின்னணியில் இருந்தன.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண