காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.


உச்சநீதிமன்றத்தில் மனு


காவிரியில் விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நிர் திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் தேவை என்பதால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


வழக்கு தொடர்வது குறித்து மூத்த வழக்கறிஞர் முகுல் ரோக்தியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இன்றே தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நதி நீர் பங்கீடு:


காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் வரையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது.  இதனால், தமிழகத்திற்கான நீரை உடனடியாக வழங்க வேண்டும் என கர்நாடக அரசை, மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.


காவிரி மேலாண்மை கூட்டம்: 


இந்நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை வகிக்கும் நிலையில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 38 டி.எம்.சி தண்ணீரை உடனே திறக்க தமிழக அரசு வலியுறுத்தியது.  ஆனால், கர்நாடக அரசு அதை ஏற்க மறுத்ததால் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.


சித்தராமையா விளக்கம்:


இதுதொடர்பாக பேசியிருந்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா “கேரளா, குடகு மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளதால்  எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை. இதன் காரணமாகவே தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீரை திறக்க முடியவில்லை” என விளக்கம் அளித்தார்.


இதனால், தமிழக அரசுக்கான தண்ணீரை பெற உச்ச்சநீதிமன்றம் செல்வோம் என நீர்வள அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார். அதைதொடர்ந்து தான் தமிழ்நாட்டிற்கான தண்ணீரை உடனடியாக வழங்கக் கோரி, உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.