கர்நாடகா: மலை மஹாதேஸ்வரா மலையின் மீன்யம் வன விலங்குகள் சரணாலயத்தில் தாய்ப்புலியும், மூன்று குட்டிப் புலிகளும் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்து கிடந்தன. தாய் புலி மற்றும் அதன் 4 குட்டிகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரே நாளில் 5 புலிகள் மரணம்

கர்நாடக மாநிலத்தின் வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை (எம்.எம். ஹில்ஸ்) வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு தாய் புலி மற்றும் அதன் நான்கு குட்டிகள் உட்பட மொத்தம் ஐந்து புலிகள் ஒரே நாளில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் மலை மஹாதேஸ்வராவில், மீன்யம் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் தாய்ப்புலியும், மூன்று குட்டிப்புலிகளும் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்து கிடந்தது. வனத்துறை ஊழியர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, புலிகள் இறந்து கிடந்ததை கண்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், புலிகளின் உடல்களை பார்வையிட்டனர். சுற்றுப்புற கிராமங்களில் யாராவது, இறைச்சியில் விஷம் கலந்து, புலிகளை கொன்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். புலிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தகவலறிந்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். புலிகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறியதாவது:

புலிகள் பாதுகாப்புக்கு பெயர் பெற்ற இம்மாநிலத்தில் ஒரே நாளில் 5 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. புலிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விசாரணை, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையிலான குழுவால் நடத்தப்படும். குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன். வன ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவோ, அல்லது மின்சாரம் தாக்கி, அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறினார்.

சூழலியல் ஆர்வலர்களின் கவலை

இந்தியாவிலேயே மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில்தான் அதிக புலிகள் (சுமார் 563) உள்ளன. புலிகள் பாதுகாப்பில் சிறந்த மாநிலமாக விளங்கும் கர்நாடகாவில், ஒரே இடத்தில் ஐந்து புலிகள் இறந்தது சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக மாதேஸ்வரன் மலை சரணாலயத்தை "புலிகள் காப்பகமாக" அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், இப்பகுதிக்குக் கூடுதல் பாதுகாப்பு கிடைத்து, இதுபோன்ற மனித-விலங்கு மோதல்களையும், பழிவாங்கும் கொலைகளையும் தடுக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்தத் துயரச் சம்பவம், மனித-விலங்கு மோதலின் தீவிரத்தையும், வனவிலங்கு பாதுகாப்பில் உள்ள சவால்களையும் மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளது.