புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி  வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி  மாநிலம்  காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் தேவமணி (வயது 53). இவரது வீடு திருநள்ளார் மெயின் சாலை சுரக்குடி சந்திப்பு அருகே உள்ளது. அதே மெயின் சாலையில் இவரது கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனி பகவான் கோயில் அருகில் உள்ளது.




நேற்று இரவு 10.20 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து தனது வீட்டுக்கு ஆதரவாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் தேவமணி சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில்  வந்த மர்ம நபர்கள் திடீரென தேவமணியை அவரது வீட்டுக்கு அருகில் வழி மறித்து கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டனர். உடலில் தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டு காயமடைந்த தேவமணியை ரத்த வெள்ளத்தில் அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவமணி பரிதாபமாக இறந்து போனார்.




இது குறித்து திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்திருக்கலாம் போலீஸ் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேவமணி மீது ஏற்கனவே பல முறை கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இதை யொட்டி திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் காரைக்கால் மாவட்டம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா அறிவித்துள்ளார். மேலும் தேவமணி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர