விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பந்தல் போடப்பட்டு, அமைச்சர் செஞ்சி கே மஸ்தான் தலைமையில் தயாளன் ஆதரவாளர்கள் அமர்ந்து இருந்தனர். தேர்தல் தொடங்குவதற்கு முன் எலுமிச்சம்பழத்தில் சூடம் ஏற்றி, தேங்காயைச் சூறை விட்டு பூஜை செய்து தேர்தலை தொடங்கினர். 




விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க சார்பில் 17 கவுன்சிலர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 1 கவுன்சிலர், அ.தி.மு.க  3 கவுன்சிலர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2 கவுன்சிலர், சுயேச்சையாக 3 பேர் உள்பட 26 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இதில் தி.மு.க கூட்டணியில் 18 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதால் மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவியை தி.மு.க கைப்பற்றும் நிலை உள்ளது.



இதனை தொடர்ந்து நேற்று   ஒன்றிய தலைவர்  பதவிக்கான தேர்தலும்,  ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற இருந்த நிலையில் திமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தனர்.


இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளனை  ஊராட்சி ஒன்றிய தலைவர் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் நல்லூர் கண்ணன் பல வருடங்களாக நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகிறேன், மேலும் எனக்கு அதிமுக மற்றும் பாமக சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.  என்று ஒன்றிய தலைவர் பதவிக்கு மனு அளித்தார்.


இந்த நிலையில் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளனுக்கு ஆதரவாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் செயல்படுவதாக கூறி நல்லூர் கண்ணன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லூர் கண்ணன் ஆதரவாளர்கள் மற்றும் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் தயாளன் ஆதரவாளர்கள் நல்லூர் கண்ணனை மனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் நல்லூர் கண்ணனுக்கு அதிமுக, பாமக மற்றும் சுயட்சை கவுன்சிலர்கள் ஆதரவு தருவதால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது. இதனை தடுக்கும் வகையில் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் அவரை மனுத்தாக்கல் செய்ய விடாமல் ஆதரவாளர்களைக் கொண்டு மோதலில் ஈடுபட்டார்.


இதனைத் தொடர்ந்து நல்லூர் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலில் போலீசார் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தேதி அறிவிப்பின்றி ஒன்றிய தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். பூஜை போட்டு தொடங்கிய தேர்தல், புஷ்... என முடிந்தது.