தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பழிக்குபழி கொலை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, பல்வேறு தரப்பினர் குற்றம் சாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், பாரதப்பள்ளி குன்னத்துவிளையை சேர்ந்தவர் ஜாக்சன், இவர் திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளார். இவருடைய மனைவி உஷாகுமாரி இவர் திருவட்டார் பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு அஸ்ரின் ஜெனிலியா, அஸ்லின் ஜெஸ்லியா என 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணி அளவில் ஜாக்சன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது வீடிற்கு அருகே உள்ள அந்தோணியார் ஆலய குருசடிக்கு சென்று அவர் ஜெபம் செய்தார்.
அப்போது மனைவி உஷாகுமாரி வீட்டிற்கு தேவையான பொருட்களை உடனே வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார். ஆகையால் உடனே இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கடைக்கு செல்வதற்காக தேவாலயத்தை விட்டு வெளியே வந்தார்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரமாரியாக வெட்டிக்கொலை
அப்போது 2 இருசக்கர வாகனத்தில் 6 பேர் கொண்ட கும்பல் அவரை நோக்கி நெருங்கியது. அப்போது கும்பலில் இருந்த ஒருவர் ஜாக்சனை பார்த்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு இன்றோடு தொலைந்து போ என்றவாறு திடீரென அரிவாளை கொண்டு வெட்டினார்.
திடீரென அருவாளை கொண்டு வெட்டியதால் பலத்த காயத்தால் நிலைகுலைந்து சம்பவ இடத்திலியே கீழே விழுந்தார்.
இதனை தொடர்ந்து 6 பேரும் சரமாரியாக வெட்டினார்கள்.
மேலும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த உஷாகுமாரின் கண்முன்னே கணவரை சரமாரியாக வெட்டி கொலை செய்ததை பார்த்து அதிர்ந்து போனார்.
உடனே என் கணவரை காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டதால் , எங்கே இவர் நாம் அனைவரையும் அடையாளம் காண்பித்து விடுவார் என நினைத்து அந்த கும்பல் உஷாகுமாரியை வெட்ட முயற்சி செய்தனர்.
தொடர்ந்து உஷாகுமாரி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தில் இருந்த பலர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர். உடனே 6 பேர் கொண்ட கும்பல் உடனே தங்களது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பித்து சென்றனர்.
மேலும் ரத்த வெள்ளத்தில் ஜாக்சன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதனை தொடர்ந்து உஷாகுமாரி பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜாக்சன் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறியதால் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிக் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜாக்சன் உயிரிழந்தார்.
முன்விரோதம் காரணமாக கொலை - போலீசார் தகவல்
மேலும் கொலை பற்றிய தகவல் அறிந்த, தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கொலை நடந்த குருசடி முன்பு விசாரணை நடத்தினர்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கும்பலின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜாக்சனுக்கும், ராஜகுமார் என்ற விலாங்கன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
குறிப்பாக கடந்த வருடம் ஏற்பட்ட தகராறில் இருவரும் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக 2 பேர் மீதும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.
இந்த முன்விரோதம் தான் இருவருக்கும் இடையே பகைமையை அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஜாக்சனை தீர்த்து கட்டும் அளவுக்கு ராஜகுமார் திட்டத்தை தீட்டினார். சமயம் பார்த்து திட்டத்தை நிறைவேற்றியது அம்பலமானது.
அதே சமயத்தில் ராஜகுமாருடன் வந்த 5 பேர் யாரென்று தெரியவில்லை. ராஜகுமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பாக உஷாகுமாரி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவரை, கும்பலுடன் வந்த ரவுடி சுற்றி வளைத்து கொடூரமாக கொலை சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.