காஞ்சிபுரம் மாநகராட்சி 16- வது வார்டு கவுன்சிலர் தங்கள் பகுதியில் சாலை சரியாக போடவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
காஞ்சிபுரம் மாநகராட்சி சர்ச்சை
காஞ்சிபுரம் மாநகராட்சி மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில், திமுக மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 51 கவுன்சிலர்களும் கலந்து கொள்ளாத நிலையில், மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர் கொடி தூக்கி வரும் நிலையில், இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானம் முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டது. ஒருபுறம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் நடைபெற்ற நிலையில், மறுபுறத்தில் சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்
காஞ்சிபுரம் மாநகராட்சியின் 16வது வார்டு சுயேட்சை கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சாந்தி துரைராஜ். 16வது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 16-வது வார்டு பகுதியில் தரமற்ற முறையில் சிமெண்ட் சாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டை சாந்தி துரைராஜ் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக ஒப்பந்ததாரர்களிடம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் குற்றச்சாட்டை முன்வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
காவல்துறை சமாதான பேச்சுவார்த்தை
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி துரைராஜ் சாலை தரமாக அமைக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தெருவில் அமர்ந்து பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், பெண் போலீசார் மூலம் பெண் கவுன்சிலரிடமிருந்து , பெட்ரோல் கேனை பிடுங்கி வீசினர். தொடர்ந்து காவல்துறையினர் கவுன்சிலர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
தொடரும் மாநகராட்சி சர்ச்சைகள்
மேலும் சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாலையின் தரம் உறுதி செய்யப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் . நம்பிக்கை இல்லா தீர்மானம் நடைபெற்ற நாளில், பெண் கவுன்சிலர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சியில் கவுன்சிலர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவது, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.