பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு:
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. மொத்தம் மூன்று சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ள முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க, 26 ஆயிரத்து 654 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3 வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ள சூழலில், துணைக் கலந்தாய்வு செப். 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எஸ்சி அருந்ததியர் மாணவர்களுக்கான காலியிடத்தை எஸ்சி மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதியோடு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு பெறுகிறது.
விரைவில் நிரம்ப உள்ள மேட்டூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியைத் தாண்டியுள்ள நிலையில், மேட்டூர் அணையையொட்டி காவிரிக் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ரெண்டே நாட்கள்தான்.. தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநரா? ஆர்.என். ரவியின் பதவி நீடிக்குமா?
ஆர்.என். ரவியின் பதவிக்காலம் 2 நாட்களில் முடிவடைய உள்ளதால், தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றார். முன்னதாக, 2019ம் ஆண்டு நாகலாந்தின் ஆளுநராக செயல்பட்டார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் இன்னும் 2 தினங்களில் முடிவடைய உள்ளது. இதனால், ஆர். என். ரவியின் ஆளுநர் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒரு கவுன்சிலர் கூட கலந்து கொள்ளவில்லை... பதவியை தக்க வைத்த மகாலட்சுமி - நடந்தது என்ன?
நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜ் பணியில் தொடர்கிறார்.திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
உடல்நலக்குறைவால் லூசி உயிரிழந்த சோகம் - காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம்
வேலூர் மாவட்ட காவல்துறையில் துப்பறியும் நாய் படைப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்த மோப்ப நாய் லூசி உயிரிழந்ததை அடுத்து, காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.துப்பறியும் நாய் படைப் பிரிவில் மோப்ப நாய் லூசி 2012 முதல் 2022 வரை கடந்த 10 வருடங்களாக சிறப்பாக பணிபுரிந்து 2022 ஓய்வு பெற்றது 2014-ஆம் ஆண்டில் தமிழக அளவில் நடைபெற்ற வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் லூசி மூன்றாம் இடம் பெற்றதும், விவிஐபி பாதுகாப்பு பணி வெடிகுண்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேலூரில் பாரத பாரம்பரிய நெல் & உணவு திருவிழா
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் & உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வேலூரில் இன்று (ஜூலை 28) நடைப்பெற்றது. வேலூர், ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் நடைப்பெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.